

இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் ‘பிபிவி’ என்று பெயர் மாற்றப்பட்டு, அதனுடன் சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பது என்று மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டுவிடும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
“மத்திய அரசு 2004ஆம் ஆண்டில் தமிழ் மொழியை ‘செம்மொழி’ என்று அறிவித்து, அதன் வளர்ச்சிக்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மைசூரில் இயங்கி வரும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தில், செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்டது.
பின்னர் தரம் உயர்த்தப்பட்டு, சென்னையில் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனமாக 2007 ஆகஸ்டு மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கியது. இதன் தலைவராக தமிழக முதல்வர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்பட விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த சில ஆண்டுகளாக செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. ஏற்கெனவே 12 துறைகளாக இயங்கி வந்த செம்மொழி நிறுவனத்தைச் சீர்குலைத்து, வெறும் 7 தற்காலிகத் திட்டங்களாகச் சுருக்கிவிட்டனர். இந்நிறுவனம் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்த செய்தி இதழ்கள் நிறுத்தப்பட்டன. செம்மொழி ஆய்வுப் பணிகள் மற்றும் அவற்றை மேம்படுத்தும் வகையில் நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றுக்கு வழங்கி வந்த நிதியையும் குறைத்துவிட்டனர்.
செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் முடக்கப்பட்டதைத் தமிழக அரசும் கண்டும் காணாமல் விட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசு இந்தியாவில் இந்தி, சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகள் சார்ந்த நிறுவனங்கள் அனைத்தையும் அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களுடன் இணைக்க வேண்டும் என்ற ‘நிதி ஆயோக்’ பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்தது.
அதன்படி செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தைத் திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு 2017இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காகவே செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர் நிரப்பப்படாமல் மத்திய அரசு பொறுப்பு இயக்குநராக மத்திய அரசின் அதிகாரிகளை நியமித்தது.
தமிழ்நாட்டில் மதிமுகவும் மற்ற அரசியல் கட்சிகளும் தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தோடு, செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைக்கும் திட்டத்திலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது. இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பின்னர் இதற்கு நிரந்தர இயக்குநர், சில மாதங்களுக்கு முன்புதான் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969இல் தொடங்கப்பட்ட இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் (Central Institute of Indian Languages -CIIL) தற்போது மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் பெயர் ‘பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா என்று மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து செம்மொழி சிறப்பு பெற்றுள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழித் துறைகளைப் புதிதாகத் தொடங்கப்படும் பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்து மொழி ஆய்வுப் பணிகளைத் தொடர, 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைந்துள்ளது. இதன் தலைவராக தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற என்.கோபால்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா ஆகிய செம்மொழிகளுக்கு மத்திய மொழி ஆய்வு நிறுவனங்கள் எதுவும் இல்லை. ஆனால் செம்மொழி சிறப்பைப் பெற்ற தமிழ் மொழிக்கு உயர் சிறப்பு மத்திய நிறுவனம் ஒன்றை அப்போதைய முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் மத்திய அரசு உருவாக்கியது.
தற்போது இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் ‘பிபிவி’ என்று பெயர் மாற்றப்பட்டு, அதனுடன் சென்னையில் இயங்கி வரும் செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பது என்று மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையால் தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளுக்குப் பெரும் தடை ஏற்பட்டுவிடும். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு தலைவர் பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர், மத்திய பாஜக அரசின் இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதிகக் வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்”.
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.