Last Updated : 04 Dec, 2020 03:15 AM

 

Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

பாஜக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது; ரஜினி வருகையால் தமிழக அரசியலில் அடித்தள மாற்றம் ஏற்படும்: எம்ஜிஆர் போலவே சாதிப்பார் என பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி நம்பிக்கை

ரஜினி தனிக் கட்சி தொடங்குவதால் தமிழகஅரசியலில் அடித்தள மாற்றம் ஏற்படும். பாஜக போன்ற ஒருமித்த சிந்தனை கொண்ட கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று ரஜினியின் நண்பரும், ‘துக்ளக்’ ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:

நீங்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. ரஜினியின் அரசியல் வருகை தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக நம்பினேன். அது நடந்திருக்கிறது. அவரது அரசியல் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் என்பதில் சந்தேகமே இல்லை. 1973-ல் இருந்து தமிழக அரசியலில்நிகழ்ந்த மாற்றங்களை கவனித்தால், ரஜினியின் முக்கியத்துவத்தை உணர முடியும். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், 1973 திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தினார். ‘திமுக உடைந்துவிட்டது. எனவே, காமராஜரின் காங்கிரஸ்தான் வெற்றி பெறும்’ என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், அதிமுக 51 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது. திமுக 20 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

திமுகவை தோற்கடிக்க எம்ஜிஆரால் மட்டும்தான் முடியும் என்று மக்கள் நம்பினர்.அதனால், திமுக எதிர்ப்பு வாக்குகள் மட்டுமின்றி, காங்கிரஸின் வாக்குகளும் எம்ஜிஆருக்கு கிடைத்தன. அதேபோல தற்போது திமுக, அதிமுகவை தோற்கடிக்க ரஜினியால் முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். எம்ஜிஆர் போல ரஜினியும் வெல்வார். அவர் தனிக் கட்சி தொடங்குவதால் தமிழக அரசியலில் அடித்தள மாற்றம் ஏற்படும்

எம்ஜிஆர் உடன் ஒப்பிடுகிறீர்களே, எம்ஜிஆர் போல ரஜினியால் சாதிக்க முடியுமா?

ரஜினியை திரைப்பட நடிகராக மட்டுமே மக்கள் பார்க்கவில்லை. எம்ஜிஆர் போலவேரஜினிக்கும், மக்கள் மத்தியில் நடிகர் என்பதையும் தாண்டி சமுதாயத் தலைவர் என்ற எண்ணம் உள்ளது. ரஜினி நல்லவர், ஆன்மிகவாதி, தவறு செய்யமாட்டார், வெளிப்படையாக பேசக் கூடியவர் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால்தான் ரஜினியின் திரைப்படத்தைபார்க்காதவர்கள்கூட அவரை ஆதரிக்கின்றனர். கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் திமுகவும், அதிமுகவும் தங்கள் கட்சி பலத்தை நம்பியே களத்தில் நிற்கின்றன. இந்த சூழலில் ரஜினிக்கு இணையான மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவர் தற்போது தமிழகத்தில் இல்லை. எனவே, ரஜினி நிச்சயம் சாதிப்பார்.

அதிமுக, பாஜகவை ஆதரிப்பவர்கள்தான் ரஜினி கட்சி தொடங்க வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே, ரஜினியால் அதிமுக, பாஜகவுக்குதான் பாதிப்பு என்ற கருத்து உள்ளதே?

தமிழக மக்கள் திமுகவை விரும்பவில்லை. கடந்த காலங்களிலும், திமுகவை தோற்கடிக்கும் அளவுக்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாதபோதுதான் திமுக வெற்றிபெற்றுள்ளது. 1996-ல் ஜி.கே.மூப்பனார் தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்ததும், ரஜினியின் ஆதரவுக் குரலும் திமுகவை ஆட்சியில் அமர்த்தியது. தமிழகத்தைப் பொருத்தவரை திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவுக்கும், அதிமுகவை எதிர்ப்பவர்கள் திமுகவுக்கும் வாக்களிக்கின்றனர். திமுக எதிர்ப்பு வாக்குகள்தான் தமிழகத்தில் அதிகம்.அதிக முறை அதிமுக வென்றதற்கு இதுவே காரணம். திமுக, அதிமுகவுக்கென்று உள்ளவாக்குகள் அக்கட்சிகளுக்குதான் கிடைக்கும். இந்த இரு கட்சிகளையும் எதிர்ப்பவர்கள் ரஜினிக்கு வாக்களிப்பார்கள். ரஜினி வருகையால் அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். திமுகவுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும்.

234 தொகுதிகளிலும் ரஜினி தனித்து போட்டியிடுவாரா அல்லது கூட்டணி அமைப்பாரா?

234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினி அறிவித்தது அவரது தலைமையில் என்றுதான் நினைக்கிறேன். அவரது கொள்கைகள், சிந்தனைகளை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்பதில் தவறு இல்லை.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புஉள்ளதா? பாஜக நிர்வாகியாக இருந்த அர்ஜுன மூர்த்தி தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாரே?

சிந்தனை அளவில் ரஜினியோடு இணைந்து போகிற கட்சி பாஜக. எனவே, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புஉள்ளது என்றே நினைக்கிறேன். வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் கூட்டணி அமைக்க விரும்புகிற அதிமுக, திமுக அல்லாத கட்சிகளும் ரஜினியுடன் சேரலாம். பாஜக தனித்து போட்டியிட்டால் ரஜினியால் அக்கட்சிக்கும் பாதிப்பு ஏற்படலாம். அர்ஜுன மூர்த்தி சமீபத்தில்தான் பாஜகவில் இணைந்தார். திமுகவோடு அதிக தொடர்பில் இருந்தவர் என்று கேள்விப்படுகிறேன்.

ரஜினி ஆட்சி அமைப்பார் என்று நினைக்கிறீர்களா?

எம்ஜிஆர் ஏற்படுத்தியது போன்ற அரசியல் மாற்றத்தை ரஜினி ஏற்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த மாற்றத்துக்காகத்தான் தமிழகத்தில் எதிர்பார்ப்பும், ஏக்கமும் இருந்தது. அதை ரஜினி கட்டாயம் பூர்த்திசெய்வார் என்பது என் கணிப்பு.

இவ்வாறு எஸ்.குருமூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x