Last Updated : 04 Dec, 2020 03:15 AM

 

Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

தமிழக அரசியலில் ரஜினியின் வருகை யாருக்கு பாதகம், யாருக்கு சாதகம்?

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக தொடர்ந்து சூப்பர் ஸ்டாராகவும், அரசியல் தளத்தில் நீண்ட காலமாக செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கும் ரஜினிகாந்த், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிற‌து.

வரும் 2021‍ தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பணிகளை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சமீபத்திய தமிழக பயணத்தின் போது அதிமுக -பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டது. அதேவேளையில் கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அமித் ஷாவை சந்திக்காமல் தவிர்த்தது அவை கூட்டணியில் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின், திமுக கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார். விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர விரும்பினாலும், திமுக இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதேவேளையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பாமகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் விசிக வெளியேறும் நிலை ஏற்படும்.

தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்து களத்தில் இறங்கும் தருவாயில், ரஜினியின் அறிவிப்பு அக்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது அரசியல் வருகை யாருக்கு சாதகமாகவும், யாருக்கு பாதகமாகவும் அமையும் என ஆராய தொடங்கியுள்ளன.

அதிமுகவுக்கு பாதகம்?

கடந்த இரு தேர்தல்களில் வென்று ஆட்சியை பிடித்த அதிமுக, மூன்றாவது முறையாக அரியணை ஏற எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆட்சி அதிகாரம், பண பலம், மத்திய அரசின் ஆதரவு, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி, இந்து மக்களின் வாக்கு வங்கி ஆகியவற்றை கொண்டு ஆட்சியை பிடிக்க காய் நகர்த்தி வருகிறது.

ஆனால் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருப்பதால் மக்களுக்கு அதிமுக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி எதிரில் இருப்பவர்களுக்கு சாதகமாக மாறும். ரஜினி மென்மையான‌ ஆன்மீக அரசியலை பேசுவதால், இந்து ஆதரவு வாக்குகள் அவருக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு பின் வலுவான தலைமை இல்லையே என புழுங்கும் முக்கிய‌ அதிமுக நிர்வாகிகளும், பிற கட்சிகளில் ஓரம் கட்டப்பட்டவர்களும் ரஜினியின் கட்சிக்கு மாற வாய்ப்பு உள்ளது.

திமுகவுக்கு நெருக்கடி

ஜெயலலிதாவின் மறைவு, சசிகலாவின் சிறை வாழ்க்கை, அமமுக.வின் வாக்குப் பிரிப்பு, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் குறைகள் ஆகியவற்றை கணக்குப் போட்டு எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என திமுக நினைக்கிறது.

எனவே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மு.க.ஸ்டாலின் இப்போதே முதல்வராகி விட்ட நினைப்பில், ‘‘நாமே 200 இடங்களில் போட்டியிடலாம். கூட்டணிக்கு மீதியை கொடுத்தால் போதும்’’ என்று பேசி வருகின்றனர். இதனால் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று கட்சியின் தலைவர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்குவதால் கூட்டணியில் இடம் கிடைக்காத சிறிய கட்சிகளும், கேட்ட தொகுதிகள் கிடைக்காத பெரிய கட்சிகளும் கூட அவரது பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது.

அந்த வகையில் சிறிய கட்சிகளுக்கு இதுவரை திமுக, அதிமுக என இரண்டு வாய்ப்புகள் இருந்த நிலையில், தற்போது ரஜினி என்ற மூன்றாவது வாய்ப்பு உருவாகி உள்ளது. ஒருவேளை காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட சிறிய கட்சிகள் மூன்றாவது வாய்ப்பை தேர்வு செய்தால், திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக குறையும். இதனால் அதிமுக.வுக்கு இழப்புகள் ஏற்பட்டாலும், சிறிய கட்சிகளின் இடம்பெயர்வால் திமுக.வுக்கே அதிக பாதகம் ஏற்படும். அதையே கடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உணர்த்தியது.

ரஜினி அண்மையில் அமித் ஷாவை சந்திக்காமல் தவிர்த்ததன் மூலம், தனக்கு பாஜக.வோடு சேர விருப்பம் இல்லை என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார். ரஜினிக்கு தனிப்பட்ட முறையில் பாபா பட பிரச்சினையில் பாமக.வோடு மோதல் இருக்கிறது. ஒருவேளை ரஜினி பாஜக, பாமக கூட்டணியை தவிர்த்து எம்ஜிஆர் பாணியிலான வெகுஜன அரசியலை முன்னெடுத்தால் ஏழைகள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினரின் வாக்குகள் அவருக்கு கிடைக்கும்.

சினிமாக்காரர்களுக்கு

எம்ஜிஆரைப் போல திரையுலகில் உச்சமாக இருக்கும் ரஜினி, கட்சி ஆரம்பிப்பதால் தமிழக மக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். இதனால் ரஜினிக்கு பின்வரிசையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், கார்த்திக், சீமான் போன்றோருக்கு சிக்கல் ஏற்படும்.

கமல்ஹாசன் கட்சியின் கிளைகள் இன்னும் அடிமட்டம் வரை தொடங்கப்படவில்லை. கடந்த 2016 சட்டப்பேரவை, 2019 மக்களவை ஆகிய இரு தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை பிரச்சினை தேமுதிகவை உருக்குலைத்து உள்ளது. இதனால் சோர்ந்திருக்கும் அக்கட்சியினர் ரஜினியின் கட்சிக்கு தாவ வாய்ப்பு உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் தமிழக மக்களை ரஜினி நன்கு புரிந்து கொண்டு காய்களை நகர்த்தினால், அவரே எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம். ஏனென்றால், தேர்தல் களம் முதுகெலும்பு மிக்க நல்ல ஆட்டக்காரரையும், பொதுமக்கள் நல்ல தலைவரையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x