Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

ரஜினியின் பூர்வீக கிராமம் நாச்சிக்குப்பத்தில் கொண்டாட்டம்: காமராஜர், எம்ஜிஆரைப் போல நல்லாட்சி கொடுப்பார் - பெங்களூருவில் உறவினர்கள், நண்பர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளதால், அவரது பூர்வீகமான நாச்சிக்குப்பத்தில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகிலுள்ள நாச்சிக்குப்பத்தில்தான் ரஜினியின் தந்தை ரானோஜி ராவ் பிறந்தார். வேலை தேடி பெங்களூரு சென்ற அவர், ராம்பாயை மணந்து பெங்களூருவிலே குடியேறினார். ரஜினி பெங்களூருவில் பிறந்தாலும், அவரது தந்தை தன் உறவினர்களை பார்க்க அடிக்கடி நாச்சிக்குப்பம் சென்றுள்ளார். அவரது மறைவுக்கு பின் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா, நாச்சிக்குப்பம் வந்து உறவினர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நாச்சிக்குப்பத்தில் தன் பெற்றோருக்கு நினைவகம் அமைக்க 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அங்கு கிராம மக்களுக்காக குடிநீர் தொட்டியும், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டியும் அமைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ரஜினி கட்சி தொடங்கி வரும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளதால் நாச்சிக்குப்பத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி ஊர்மக்கள் கொண்டாடினர்.

ஜெயலலிதா பாணி

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் கூறும்போது, ‘‘ரஜினியின் இந்த அறிவிப்பு நாச்சிக்குப்ப மக்களுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் இங்குள்ள மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முதலாக முதல்வரானார். அதுபோல ரஜினியும் தன் பூர்வீக மாவட்டமான‌ கிருஷ்ணகிரியில் போட்டியிட்டு அரசியல் வாழ்வை தொடங்க வேண்டும். குறிப்பாக அவரது ஊரான நாச்சிக்குப்பம் இருக்கும் வேப்பனப்பள்ளி தொகுதியிலே போட்டியிட வேண்டும். அவரை வெற்றி பெற வைப்பதற்காகவே இந்த தொகுதி காத்திருக்கிறது''என்றார்.

ரஜினியின் அரசியல் வருகையால் பெங்களூருவில் வாழும் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ், மற்றொரு அண்ணன் நாகேஸ்வர ராவின் மகள் மகாலட்சுமி பாய், அக்கா அஷ்வத் பானுபாயின் மகள் லீலா பாய் உள்ளிட்டோரின் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரஜினியின் அரசியல் பயணம் வெற்றி அடைய வேண்டும் என்று அவரது உறவினர் கிருஷ்ணாஜி ராவ், கவிபுரம் கவி கங்காதேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்தார். அதே போல ரஜினியின் நண்பர்கள் ராஜ் பகதூர், ஹரி, பிரகாஷ் உள்ளிட்டோரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அண்டை வீட்டாருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறுகையில், ‘‘அரசியலில் ரஜினி நிச்சயம் வெற்றி பெறுவார். தமிழக மக்களுக்காக அவரது உயிரையும் கொடுப்பார். ரஜினி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு மேலே வந்ததால், காமராஜர், எம்ஜிஆரைப் போல நல்லாட்சிக் கொடுப்பார். ரஜினிக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். இந்தி, ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மராட்டி உள்ளிட்ட மொழிகள் தெரியும் என்பதால் தேசிய அளவில் அரசியலில் சாதனை படைப்பார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x