

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி வரும் 14-ம் தேதி தமிழகத்தில் உள்ள 12,621 கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூகநிலையில் மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமுதாயம் முன்னேற வேண்டுமானால், அதற்கு அடிப்படைத் தேவை 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு ஆகும். அதனால்தான் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனாலும், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு என்ற நமது நியாயமான கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
அறவழிப் போராட்டம்
அந்தக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக டிச.1-ம் தேதி முதல் பல கட்டங்களாக தொடர் போராட்டங்களை நடத்துவதென்று வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டு பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அறவழிப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. சென்னையில் டிச.4-ம் தேதி (இன்று) வரை நடக்கவுள்ள போராட்டங்களைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 16,743 வருவாய் கிராமங்களை நிர்வகிக்கும் 12,621 கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) அலுவலகங்கள் முன்பு வரும் 14-ம் தேதி மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடக்க உள்ளது.
கிராமங்களில் நடக்கும் இந்தப் போராட்டம்தான் நமது கோரிக்கைகளையும், அவற்றில் உள்ள நியாயங்களையும் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் கொண்டு சேர்க்கும். ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். அதுதான் நமது கோரிக்கைகளுக்கு கூடுதல்வலிமை சேர்க்கும். அதற்கான பணிகளை பாமக, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைவரும் இப்போதே தொடங்க வேண்டும்.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு போராட்டம் ஏன் என்பது குறித்த துண்டறிக்கையும், நான் எழுதிய ‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’ நூலில் 51-வது அத்தியாயமாக இடம்பெற்றிருந்த ‘வன்னியர்களே சிந்திப்பீர்’ என்ற தலைப்பிலான துண்டறிக்கையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகிகள் மூலம் போராட்டக் குழுவினரை வந்தடையும். அவற்றை வீடு, வீடாக சென்று அனைத்துத் தரப்பு மக்களிடமும் வழங்கி, அவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும். இந்தப் பணியை உடனடியாகத் தொடங்கி போராட்ட நாள் வரை தொடர வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.