

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 10 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி நேற்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட முதன்மை நீதிபதிகள் அந்தஸ்தில் பணியாற்றிய ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்தி குமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 2 ஆண்டுகளுக்கு நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 10 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு காணொலி காட்சியாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பங்கேற்றனர்.
புதிதாக பதவியேற்ற 10 நீதிபதிகளையும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏஆர்எல் சுந்தரேசன், உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், சென்னை உயர் நீதிமன்ற லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் நீதிபதிகள் தமது ஏற்புரையில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
பதவியேற்பு விழா ஏற்பாடுகளை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் தலைமையில் பதிவுத் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
மொத்தம் 75 நீதிபதிகள் பணிபுரிய வேண்டிய சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நீதிபதிகள் எண்ணிக்கை 53-ல் இருந்து 63 ஆக உயர்ந்துள்ளது. 12 இடங்கள் காலியாக உள்ளன.
அதிக பெண் நீதிபதிகள்
உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே புஷ்பா சத்யநாராயணா, வி.எம்.வேலுமணி, நிஷாபானு, அனிதா சுமந்த், பவானி சுப்பராயன், ஆர்.தாரணி, டி.கிருஷ்ணவல்லி, ஆர்.ஹேமலதா, பி.டி.ஆஷா என 9 பெண் நீதிபதிகள் உள்ளனர். தற்போது எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி என 4 பேர் பதவியேற்றுள்ளதால், பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் பணிபுரியும் உயர் நீதிமன்றம் என்ற பெருமையை சென்னை உயர் நீதிமன்றம் பெற்றுள்ளது.
நீதிபதி தம்பதியர்
புதிதாக பதவியேற்ற நீதிபதிகளில் கே.முரளிசங்கர் - டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் கணவன், மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல, தம்பதியராக இருந்த நீதிபதிகள் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்றுள்ளனர். அதேபோல நடப்பது இது 2-வது முறை என்று கூறப்படுகிறது.