Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து மருத்துவ கல்லூரி உரிமையாளரிடம் ரூ.10 கோடி பறிக்க முயற்சித்த 5 பேர் கைது

மதுரவாயல் கிருஷ்ணா நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ் (40). இவர் ஆலப்பாக்கத்தில் பல் மருத்துவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்குள் 7 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக் கொண்ட அவர்கள் ராகேஷிடம் சென்று ‘‘சிலைகடத்தல் தொடர்பாக உங்கள் மீது வழக்கு உள்ளது. உங்களைக் கைது செய்யாமல் இருக்க ரூ.10 கோடி தர வேண்டும். தராத பட்சத்தில் கைது செய்து சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என மிரட்டியுள்ளனர். மேலும், அவருக்கு அவகாசம் கொடுத்து தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்தராகேஷ், காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து ரோந்துப் பணியில் இருந்த மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம்விரைந்து 5 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

போலீஸ் விசாரணையில்பிடிபட்டவர்கள் குன்றத்தூரைச் சேர்ந்த நரேந்திர நாத் (40), அதே பகுதியைச் சேர்ந்த யோவான் (41), அனகாபுத்தூரைச் சேர்ந்த ஸ்டாலின் (40), மதுரவாயலைச் சேர்ந்த ராமசுப்பிரமணி (43), ஆவடியைச் சேர்ந்த சங்கர் (41) என்பது தெரிந்தது. இவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தப்பியோடிய இருவரைப் பிடிக்க போலீஸார், தனிப்படை அமைத்துள்ளனர். கைதான ராமசுப்பிரமணி, ராகேஷின் நண்பராவார். எனவே, இவர் ராகேஷிடம் பணம் பறிக்க இதுபோன்ற குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா? என தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x