

வாயலூர் கடல் முகத்துவாரம் அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், கரையோர கிராமங்களில் 20 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள தோடு, நகரியப்பகுதியின் 100 சதவீத குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கல்பாக்கத்தில் இயங்கி வரும் அணுமின் நிலைய நிர்வாகம் ரூ.32.50 கோடி நிதி ஒதுக்கி, கடந்த 2019-ம் ஆண்டு, வாயலூர் பாலாற்று முகத்துவாரம் பகுதியில் 5 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைத்தது. இந்த தடுப்புச்சுவர் மூலம் பாலாற்று படுகையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உப்பு நீர் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: தடுப்புச்சுவர் மூலம் பாலாற்று படுகையில் தண்ணீர் சேமிக்கப்பட்ட பின், கரையோர கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2 மாதங்களாக வீடுகளில் உள்ள குழாய்களில் நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கடந்த 2019-ம் ஆண்டு கரையோர கிராமங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆழ்துளை கிணறு அமைத்தால், 27 அடியிலேயே உப்புநீர் சுரப்பு ஏற்பட்டு, பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் கரையோரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வாயலூரில் தடுப்பணை அமைக்கப்பட்ட பிறகு ஆற்றுப்படுகையில் தண்ணீர் தேக்கப்பட்டு 20 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன்மூலம், உப்புநீர் சுரப்பு 47 அடி ஆழத்துக்குச் சென்றுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும், நகரியப்பகுதியின் 100 சதவீத குடிநீர் தேவையும் பூர்த்தியாகியுள்ளதால், புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன என்றனர்.
இதுகுறித்து, பாலாறு கீழ்வடிநிலக் கோட்ட வட்டாரங்கள் கூறியதாவது: வாயலூர் தடுப்புச்சுவர் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வு தொடர்பாக ஆய்வு செய்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றன.