

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்துவரும் கன மழை காரணமாக 783 ஏரிகள் நிரம்பியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின்கீழ் உள்ள 574 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி 238 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன.
இதில், கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின்கீழ் உள்ள324 ஏரிகளில், 101 ஏரிகளும், ஆரணி ஆறு வடிநிலக் கோட்டத்தின்கீழ் உள்ள 250 ஏரிகளில் 137 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
மேலும், பொதுப்பணித் துறையின்கீழ் உள்ள மொத்த ஏரிகளில், 30 ஏரிகளில் 90 சதவீதத்துக்கு மேலாகவும், 29 ஏரிகளில் 80 சதவீதத்துக்கு மேலாகவும், 118 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு மேலாகவும் நீர் இருப்பு உள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில், ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி இருந்தன. இந்நிலையில் ‘புரெவி’ புயல் காரணமாக நேற்றும் தொடர்மழை பெய்ததால், இதுவரை 545 ஏரிகள் நிரம்பியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்னேரி, மணிமங்கலம் ஏரிஉள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பிஉள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு உயரம் (அடைப்புக் குறிக்குள் ஏரியின் கொள்ளளவு): தாமல் ஏரி - 14.50 அடி (18.60 அடி), தென்னேரி - 18.00 (18.00), உத்திரமேரூர் - 9.50 (20.00), பெரும்புதூர் - 16.88 (17.60), பள்ளிப்பாக்கம் - 12.32 (13.20), மணிமங்கலம் - 18.40 (18.40).
செங்கல்பட்டு மாவட்டத்தில், கொளவாய் ஏரி - 14.50 (15.00), பாலூர் ஏரி - 6.00 (15.30), பி.வி.களத்தூர் ஏரி - 14 (15), காயார் ஏரி - 15.70 (15.70), மானாம்பதி ஏரி - 13.50 (14.10), கொண்டங்கி ஏரி - 14.50 (16.11), சிறுதாவூர் ஏரி - 13.60 (13.60), தையூர் ஏரி - 13.90 (13.90), மதுராந்தகம் ஏரி - 23.30 (23.30), பல்லவன்குளம் - 8.20 (15.70) அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது.