Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

மத்திய மண்டலத்தில் தொடர் கன மழை; குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாகப்பட்டினம்/ காரைக்கால்

வங்கக் கடலில் உருவாகி உள்ள ‘புரெவி' புயல் காரணமாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட் டங்களில் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு முதல் நேற்று வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால், நாகை நம்பியார் நகரில் தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புதிய நம்பியார் நகர் பகுதியில் உள்ள ஒரு குளம் நிரம்பி கரை உடைந்ததால் வெளியேறிய தண்ணீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது.

புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சந்திரபாபு(50) என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள சமையல் அறையின் கூரையில் காரை பெயர்ந்து விழுந்தது. நாகை வண்டிக்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பக்கவாட்டுச் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்தது. நாகை புதிய பேருந்து நிலையத்தில், பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில், பயணிகள் நிற்கும் இடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில், அங்கு நின்றிருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமடையாமல் தப்பினர்.

கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு 3-வது நாளாக ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடந்த 23-ம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 1,500 விசைப்படகுகள், 3,000 பைபர் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. நாகை நம்பியார் நகர் பகுதியில், கயிறு கட்டி கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் படகு தொடர் மழையின் காரணமாக நேற்று நீரில் மூழ்கியது.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பெய்த மழை விவரம்(மி.மீட்டரில்):

நாகப்பட்டினம் 141.30, திருப்பூண்டி 137.40, தலைஞாயிறு 149.80, வேதாரண்யம் 204.80, மயிலாடுதுறை 187.40, சீர்காழி 155.20, கொள்ளிடம் 119.50, தரங்கம்பாடி 62, மணல்மேடு 109.20.

காரைக்கால் மாவட்டத்தில்...

‘புரெவி' புயல் காரணமாக காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, வரிச்சிக்குடி, திருநள்ளாறு, திருமலைராயன் பட்டினம் உள்ளிட்ட காரைக்கால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டுவிட்டு காற்றுடன் கனமழை பெய்தது. நள்ளிரவுக்குப் பின்னர் சில இடங்களில் பலத்த காற்று வீசியது.

திருநள்ளாறு, திருமலைராயன் பட்டினம் பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், சில குடியிருப்புப் பகுதிகளிலும், பல்வேறு பகுதிகளில் சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. திருநள்ளாறு அரங்கநகரில் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மரங்கள் விழுந்தன. நீர் தேங்கிய பகுதிகளிலிருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகளும், விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று மாவட்ட நிர்வாகத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. காரைக்காலில் நேற்று காலை 8.30 மணி வரை 164.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மண்டபத்தூர்,கிளிஞ்சல்மேடு, அக்கம் பேட்டை, காளிக்குப்பம், திருவேட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களையும், கடலோர மீனவ கிராமப் பகுதிகளையும், ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளையும் ஆட்சியர் அர்ஜூன் சர்மா நேரில் பார்வையிட்டு, உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

இதேபோல, திருநள்ளாறு அரங்கநகர், அத்திப்படுகை, கருக்கங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் ஏற்பட்டுள் பாதிப்புகள் குறித்து புதுச்சேரி கல்வி மற்றம் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில்...

‘புரெவி’ புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை விடிய விடிய காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது.

மாவட்டத்தில் நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், சன்னா நல்லூர், ஆண்டிப்பந்தல், திருவாரூர், மன்னார்குடி, கச்சனம், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக பல இடங்களில் மின் தடை செய்யப்பட்டது.

அதிகபட்சமாக திருத்துறைப் பூண்டியில் 13ழ மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இதனால், வளவனாறு பகுதியை ஒட்டியுள்ள வீரன் நகர் பகுதியில் உள்ள 65 குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதி அடைந்தனர்.

மழைநீர் சூழ்ந்த பகுதிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டார். அப்போது, நகராட்சி, பொதுப்பணித்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மழைநீர் விரைவாக வடிவதற்கு தேவையான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் நேற்று காலைவரை பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): திருத்துறைப் பூண்டி 130, குடவாசல் 100, திருவாரூர் 90, நன்னிலம் 80, வலங்கைமான் 75, மன்னார்குடி 70, நீடாமங்கலம் 65, பாண்டவையாறு தலைப்பு 60, முத்துப்பேட்டை 40.

திருச்சி மாவட்டத்தில்....

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திருச்சியில் உள்ள பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பெய்த மழையளவு விவரம்(மில்லி மீட்டரில்):

திருச்சி நகரம் 33, துவாக்குடி 43, நந்தியாறு தலைப்பு 32.8, சமயபுரம் 32.4, கல்லக்குடி 30.3, புள்ளம்பாடி 29.4, லால்குடி 29, தேவிமங்கலம் 28, பொன்னணியாறு அணை 27.8, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி ஜங்ஷன் தலா 26, மருங்காபுரி 25.4, பொன்மலை 24, விமானநிலையம் 23.3, வாத்தலை அணைக்கட்டு, நவலூர் குட்டப்பட்டு தலா 18, முசிறி 16, மணப்பாறை 15.4, புலிவலம், சிறுகுடி தலா 15.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): பாலவிடுதி 31, தோகைமலை 28, மைலம்பட்டி 23, கடவூர் 20, பஞ்சப்பட்டி 15.20, குளித்தலை 11, மாயனூர் 10, கிருஷ்ணராயபுரம் 8, அணைப்பாளையம் 7, அரவக் குறிச்சி 5, கரூர், க.பரமத்தி தலா 4.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்றும் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிவரை பதிவான மழையளவு(மில்லிமீட்டரில்):

அகரம்சீகூர் 97, லப்பைக்குடிகாடு 91, பெரம்பலூர் 86, எறையூர் 74, செட்டிக்குளம் 57, புதுவேட்டக்குடி 56, வேப்பந்தட்டை 51, தழுதாளை 50, கிருஷ்ணாபுரம் 47, பாடாலூர் 44, வி.களத்தூர் 38.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x