

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் சந்தித்து பேசிக்கொள்ள அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் இவர்களின் நேர்காணல் ரத்து செய்யப்பட்டு வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமாக பேசி வருகின்றனர்.
மேலும், முருகனின் வழக்கறி ஞரான புகழேந்தியிடமும் நெருங்கிய உறவினர்கள் சிலரிடமும் முருகன் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறை காவலர் கண்காணிப்பில் நெருங்கிய உறவினர் ஒருவருடன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசிய முருகன், குரூப் சாட்டிங் முறையில் வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள் வேறு சிலரிடமும் பேசியுள்ளார்.
இதைப் பார்த்த சிறைக்காவலர் அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர்த்து மற்றவர்களுடன் வீடியோ காலில் பேச அனுமதியில்லை என கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடை யே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின்பேரில் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசும் அனுமதி முருகனுக்கு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலமாக பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கோரி முருகன் கடந்த 23-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறை நிர்வாகம் அளிக்கும் உணவை மறுத்து வரும் அவர், பழங்களை சாப்பிட்டும், தண்ணீரை மட்டும் அருந்துகிறார். உண்ணாவிரதத்தை கைவிடவும் மறுத்து வரும் அவரது உடல் நிலையை சிறை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சிறை விதிகளை மீறி முருகன் வீடியோ காலில் அதிக நபர்களுடன் பேசினார் என்றும், அதை தடுத்த சிறை காவலரையும் பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று பாகாயம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், முருகன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.