Last Updated : 03 Dec, 2020 08:29 PM

 

Published : 03 Dec 2020 08:29 PM
Last Updated : 03 Dec 2020 08:29 PM

ரஜினி கட்சி அறிவிப்பு; கொங்கு மண்டலத்தில் ரசிகர்கள் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

கோவை சலீவன் வீதியில் ஊர்வலமாக வந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள். படங்கள்: ஜெ.மனோகரன்.

கோவை

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்புக்கு, அவரது ரசிகர்கள் கோவையில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். ரஜினிகாந்த் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு, அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர், நீலகிரியில் அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ரஜினி மக்கள் மன்றத்தின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம், ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ளது.

ரஜினிகாந்தின் அறிவிப்பை வரவேற்று, ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் சாலை - டி.பி.சாலை சந்திப்பில், மன்றத்தின் மாவட்டப் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் இன்று (3-ம் தேதி) கட்சிக் கொடியுடன் திரண்டு பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பெரிய கடைவீதியில் உள்ள மணிகூண்டு அருகேயும் ரஜினி மக்கள் மன்றத்தின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, கோவை சலீவன் வீதியில் உள்ள, ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி கோவிலில், இன்று மாலை ரஜினி மக்கள் மன்றத்தின் தெற்கு தொகுதி நிர்வாகி சத்தியமூர்த்தி, ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளரான இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஊர்வலமாகத் திரண்டுவந்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். அதைத் தொடர்ந்து அங்கே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற அலுவலகப் பகுதியில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் மன்றத்தின் கொடியோடு இன்று திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டம் உதகையில், காபி ஹவுஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.குமார் தலைமை வகித்தார். நடிகர் கராத்தே ராஜா முன்னிலை வகித்தார். ரசிகர்கள் மழையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, சலீவன் வீதி ஸ்ரீ ராகவேந்திரர் சுவாமி கோவிலில் வழிபாட்டுக்கு பிறகு இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று (3-ம் தேதி) செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என ரஜினிகாந்த் அறிவித்து இருப்பது, ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன் அறிவிப்பில் உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்ய வேண்டும் என்பது அவரது தியாகத்தின் வெளிப்பாடு. 2 பெரிய கட்சிகளுக்கு இடையே ஆட்சி மாற்றத்தை கொடுப்பேன் என்று சொல்வதற்குஹ் துணிச்சல் வேண்டும். வீரம் வேண்டும். தியாகம், வீரம், விவேகம் இந்த அறிவிப்பில் வெளிப்பட்டு உள்ளது. அவரது ஆன்மிக அரசியல் கொள்கை, நிச்சயம் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x