முதுகலை தடயவியல் மருத்துவர்கள் தான் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுகலை தடயவியல் மருத்துவர்கள் தான் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

முதுகலை தடயவியல் மருத்துவர்கள் தான் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும். இறந்தவர் உடலை உறவினர்கள் பார்வையிடுவதற்கு முன்பு பிரேதப் பரிசோதனையை தொடங்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பேரையூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை கடந்த செப். 16-ல் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மறுநாள் வீடு அருகேயுள்ள மரத்தில் ரமேஷ் தூக்கில் சடலமாக தொங்கினார்.

போலீஸார் ரமேஷை அடித்துக் கொலை செய்து சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டதாகக் கூறி மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் கோரி ரமேஷின் சகோதாரர் சந்தோஷ் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவில் நீதிபதி மேலும் கூறியிருப்பதாவது:

* இறந்தவரின் உடலின் முன், பின் பகுதியை இறந்தவரின் உறவினர் அல்லது பிரதிநிதி பார்வையிட்டு வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

* இறந்தவரின் உடலை உறவினர்கள் யாரும் பார்வையிடுவதற்கு முன்பு பிரேதப் பரிசோதனையை தொடங்கக்கூடாது.

* உறவினர்கள் இறந்தவர் உடலை பார்க்க மறுத்தால் நீதித்துறை நடுவர் பிரேதப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கலாம்.

* அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளைச் சேர்ந்த தடயவியல் மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இரு மருத்துவர்கள் தான் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும்.

* உடலில் எழும்பு முறிவு இருப்பதைக் கண்டறிய முழு உடலும் எக்ஸ்ரே செய்யப்பட வேண்டும். பிரேதப் பரிசோதனையைத் தொடக்கம் முதல் முடிவு வரை வீடியா பதிவு செய்ய வேண்டும்.

* பிரேதப் பரிசோதனையை அது தொடர்பான மெடிக்கல் ஜூரிஸ்ப்ருடென்ஸ் மற்றும் டாக்சிகாலஜி புத்தகத்தின் 26-வது எடிசஷனில் கூறியிருப்பது போல் பிரேதப் பரிசோதனையை 6 கட்டங்களாக நடத்த வேண்டும்.

* உடலில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்புகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

* பிரேதப் பரிசோதனை அறிக்கையை விரைவில் விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும்.

* ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவை இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசு அல்லது பிரதிநிதியிடம் வழங்க வேண்டும்.

* பிரேதப் பரிசோதனை அறிக்கை பெறப்பட்டதும் உறவினர்கள் நீதிமன்றம் செல்வதாக தெரிவித்தால் உடலை குறைந்தபட்சம் 48 மணி நேரம் பாதுகாக்க வேண்டும். உடல் உடனடியாக எரியூட்டப்பட்டால் இரண்டாவது பிரேதப் பரிசோதனை கோரிக்கை நிறைவேறாமல் போய்விடுகிறது.

ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் அவசரமாக எரியூட்டப்பட்டதால் சர்ச்சையானது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற நிகழ்வுகளை பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட போலீஸார் தவிர்க்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களை போலீஸார் சட்டப்படி வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in