Published : 03 Dec 2020 07:30 PM
Last Updated : 03 Dec 2020 07:30 PM

விவசாயச் சட்டங்களுக்கு எதிராகக் கோவையில் தொடர் மறியல் போராட்டம்: இடதுசாரிக் கட்சிகள் அறிவிப்பு

மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள விவசாயச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என இடதுசாரிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மத்தியில் அமல்படுத்தப்பட்டுள்ள வேளாண் சட்டங்களைக் கண்டித்து தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு இன்று வரை தீர்வு காணப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் சட்டங்களைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிவசாமி, தேவராஜ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ‘விவசாய விரோத மசோதாக்களைத் திரும்பப்பெற வேண்டும். போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும். அடக்குமுறைகளை ஏவி விவசாயிகளை ஒடுக்க நினைக்கக் கூடாது’ என்று இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக டிசம்பர் 5 பொள்ளாச்சியிலும், டிசம்பர் 7 அன்னூரிலும், டிசம்பர் 8 கோவை காந்திபுரத்திலும், டிசம்பர் 8 மேட்டுப்பாளையம், டிசம்பர் 9 சூலூர் பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x