Published : 03 Dec 2020 07:13 PM
Last Updated : 03 Dec 2020 07:13 PM

நிரம்பாமலேயே மறுகால்பாயும் மதுரை வண்டியூர் கண்மாய்: மழைநீரைத் தேக்க நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை 

மதுரை வண்டியூர் கண்மாய் நிரம்புவதற்கு முன்பே தேங்கிய மழைநீர் மறுகால் பாய்ந்து வைகை ஆற்றிற்கு வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

மதுரை நகரின் மையத்தில் 650 ஏக்கரில் வண்டியூர் கண்மாய் கடல் போல் பரந்து விரிந்து காணப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளில் கண்மாயின் சுற்றுவட்டாரக் கரைப்பகுதிகள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டதால் தற்போது 557 ஏக்கர் அளவில் கண்மாய் சுருங்கி விட்டது.

தூர்வாரப்படாததால் கண்மாயின் மையப்பகுதியில் மண் மேடுகள் காணப்படுகின்றன. அதனால், பெருமழை பெய்து தண்ணீர் வந்தாலும் கண்மாய் நிரம்ப வாய்ப்பே இல்லை.

கடந்த 20 ஆண்டுகளில் வண்டியூர் கண்மாய் முழுமையாகத் தண்ணீர் நிரம்பியதே இல்லை. மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் கண்மாயின் சுற்றுவட்டாரப்பகுதியில் கட்டிடங்கள் கட்டி வசிக்கும் மக்கள், தனியார், இரவோடு இரவாகத் தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.

அதனால், பிரம்மாண்டமான கண்மாய் இருந்தும் வண்டியூர் கண்மாய் காட்சிப்பொருளாகவே இருக்கிறது. தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் இந்த கண்மாய்க்கு சாத்தையாறு அணை கால்வாயில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேலும், நிரம்பும் சுற்றுவட்டார மற்ற கண்மாய்களில் இருந்து தண்ணீர் வருவதால் கண்மாய் வேகமாக நிரம்பி கொண்டிருக்கிறது. ஆனால், கண்மாய் தூர்வாரப்படாததால் நிரம்புவதற்கு முன்பே கடந்த சில நாளாக தண்ணீர் வீணாக வெளியேறி வைகை ஆற்றில் கலந்து கொண்டிருக்கிறது.

அதனால், வழக்கம்போல் மழை பெய்தும் வண்டியூர் கண்மாய்க்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது.

இதுகுறித்து நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்லூர் அபுபக்கர் கூறுகையில், ‘‘ஒரு காலத்தில் கண்மாய்கள் நிறைந்த ஊராக இருந்த மதுரையில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே கண்மாய்கள், குளங்கள் உள்ளன.

அந்தக் கண்மாய்களும் தூர்வாரப்படாததால் பெரும் மழை பெய்து தண்ணீர் வந்தாலும் அதில் முழுமையாக தேக்க முடியவில்லை.

அதனால், மழை பெய்து சில வாரத்திலேயே மீண்டும் கண்மாய்கள் தண்ணீரில்லாமல் வறண்டு நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிடுகிறது.

மதுரையின் நிரந்தர குடிநீர்ப் பிரச்சனைக்கு கண்மாய்களை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் பராமரிக்காமல் விட்டதே காரணம். வண்டியூர் கண்மாயை மட்டும் தூர்வாரி பெய்கிற மழைநீரை தேக்கிவைத்தால் மதுரையில் தண்ணீர் பற்றாக்குறையே வராது.

வண்டியூர் கண்மாய் மட்டுமில்லாது செல்லூர் கண்மாயும் நிரம்புவதற்கு முன்பே தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது, ’’ என்றார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வண்டியூர் கண்மாயில் 107 மில்லியன் கன அடி அளவிற்க தண்ணீரை தேக்கலாம். தற்போது 70 மில்லியன் கன அடிக்கு தண்ணீர் உள்ளது. கரையோரப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் வெளியேற வாய்ப்புள்ளது. அதைப் பார்வையிட்டு முழுமையாக தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கிறோம், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x