எம்ஜிஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி: சைதை துரைசாமி ஆதரவு

எம்ஜிஆர் வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி: சைதை துரைசாமி ஆதரவு
Updated on
1 min read

எம்ஜிஆருக்குத் துணை நின்று, ஆதரவளித்து, திமுகவை வீழ்த்திய அனைவரும் ரஜினிக்கு ஆதரவு தருவார்கள் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைதை துரைசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:

“ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடக்கம், வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்.

இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம் இது. 1972-ல் எம்ஜிஆர் கொண்டு வந்த மாற்றத்துக்கு இணையாக அமையக்கூடிய திருப்பம் ரஜினி அறிவிப்பு.

கடந்த 2018-ம் வருடம் மார்ச் 5-ம்தேதி சென்னை வேலப்பன் சாவடியில் எம்ஜிஆரின் உருவச்சிலை திறப்பு விழாவில் ரஜினி, “என்னால் எம்ஜிஆர் போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியைத் தரமுடியும்” என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன் உறுதிபடச் சொல்லி இருந்தார்.

நல்ல திறமையான ஆலோசகர்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அத்தகைய ஒரு ஆட்சியைக் கொடுப்பேன் என்பதையும் ரஜினி சொல்லி இருந்தார். ஏழைகளுக்கான சாமானிய மக்களுக்கான எம்ஜிஆரின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

எம்ஜிஆருக்குத் துணை நின்று, ஆதரவளித்து, திமுகவை வீழ்த்திய அனைவரும் ரஜினிக்கு ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம். கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தமிழக மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்டு அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது.

'தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு. நிச்சயம் அது நடக்கும்' என்ற ரஜினியின் நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்”.

இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in