Last Updated : 03 Dec, 2020 06:27 PM

 

Published : 03 Dec 2020 06:27 PM
Last Updated : 03 Dec 2020 06:27 PM

கோயில் அழைப்பிதழ்களில் தமிழ் ஓதுவார்களையும் குறிப்பிட வேண்டும்: அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் சமஸ்கிருத மந்திரம் சொல்பவர்களைக் குறிப்பிடுவது போல் தமிழ் ஓதுவார்களையும் குறிப்பிட வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளஞ்செழியன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் 900 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலில் இன்று (டிச. 4) குடமுழுக்கு நடைபெறுகிறது. குடமுழுக்கில் சைவ முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடப்பட வேண்டும்.

அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கல்யாணபசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் குடமுழுக்கில் சைவ ஆகம விதிப்படி தேவாரம், திருவாசகம் ஓத உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கோவில் நிர்வாகம் தரப்பில், 25 ஓதுவார்கள் உள்ளனர். ஆறுகால பூஜைகள் முடிந்த பிறகே குடமுழுக்கு நடைபெறும். ஆறுகால பூஜையில் தேவாரம், திருவாசகம் பாடப்படும். குடமுழுக்கில் தமிழ் திருமுறைகள் பாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், குடமுழுக்கு அழைப்பிதழில் சமஸ்கிருத மந்திரம் சொல்பவர்களை குறிப்பிடும் போது, தமிழ் திருமறைகள் ஓதுவார்களை ஏன் குறிப்பிடவில்லை. அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்காது? இது தொடர்பாக தஞ்சை பெரிய கோவில் நிகழ்வுக்கு பின்னரும் அறநிலையத்துறை அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ளாதது ஏன்? என கேள்வி எழப்பினர்.

பின்னர் நீதிபதிகள், கோவில் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களில் சமஸ்கிருத மந்திரம் ஓதுவோர்களை குறிப்பிடும் போது, அதற்கு நிகராக தமிழ் திருமுறைகளை ஓதுவோர்களையும் குறிப்பிட வேண்டும்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x