Last Updated : 03 Dec, 2020 07:18 PM

 

Published : 03 Dec 2020 07:18 PM
Last Updated : 03 Dec 2020 07:18 PM

ஸ்டாலின் மீது விரைவில் வழக்கு; கனிமொழிக்குப் பார்வைக் கோளாறு: முதல்வர் பழனிசாமி பேட்டி

திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் சம்பந்தமாக ஆதாரங்களைத் திரட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் பயணியர் ஆய்வு மாளிகையில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி இன்று கூறியதாவது:

''திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துவிட்டதாகவும், முறைகேடுகளில் அமைச்சர்கள் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து வீண் பழி சுமத்தி, குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இந்திய பட்ஜெட்டை மிஞ்சும் வகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டு ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடி முறைகேடு செய்த கட்சிதான் திமுக.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே, கூட்டணிக் கட்சியான திமுக மீது 2ஜி ஸ்பெக்டர் ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது. இதில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது. இந்தப் பணம் அவர்களுக்கு எப்படி வந்தது? எனது உறவினருக்கு டெண்டர் கொடுத்து ஊழல் புரிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார்.

இது சம்பந்தமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரசு ஒப்பந்தம் வழங்குவதில் உறவினர்களின் பங்களிப்பு என்னென்ன என்று மத்திய அரசிடம் எழுதிக் கேட்டு, பதில் வாங்கியுள்ளார். அவர்கள் வாங்கிய பதிலில் உள்ள உறவினர்கள் பட்டியலில் இல்லாதவருக்கு நாங்கள் ஒப்பந்தம் வழங்கிவிட்டதாகத்தான் ஸ்டாலின் வீண் பழி சுமத்தி வருகிறார். ஆன்லைன் மூலம் சர்வதேச அளவிலான முறையில் உலக வங்கி மூலம் நடத்தப்பட்ட வெளிப்படையான ஒப்பந்தத்தில் எங்கிருந்து ஊழல் செய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் சென்னையில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்ட ரூ.210 கோடி ஒப்பந்தம் விடப்பட்டது. அந்தத் திட்டத்தை முடிக்கும்போது திட்டப்பணி விலைப் புள்ளியை ரூ.410 கோடியாக உயர்த்தி ஊழல் புரிந்துள்ளனர். இதேபோல, அரசுத் திட்டப்பணிகள் ஆரம்பிக்கும்போது விடப்படும் ஒப்பந்த விலைப்புள்ளியில் இருந்து ஒரு திட்டத்தில் 32 சதவீதம், மற்றொரு திட்டத்தில் 68 சதவீதம், இன்னுமொரு திட்டத்தில் 72 சதவீதம் விலைப்புள்ளிகளை திமுக ஆட்சியில் உயர்த்தி ஊழல் புரிந்துள்ளனர்.

தற்போதுதான் அதிகாரிகள் இது சம்பந்தமான ஆதாரங்களை என்னிடம் தந்துள்ளனர். மேலும், திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்த கூடுதல் ஆதாரங்கள் திரட்டப்படும். திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் சம்பந்தமாக ஆதாரபூர்வமாகத் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

திமுக ஆட்சியில் அரிசி பேர ஊழல், வீராணம் ஏரி ஊழல், பூச்சி மருந்து வாங்கியதில் ஊழல் எனப் பல்வேறு ஊழல்களைப் புரிந்தள்ளனர். ஏன், சர்காரியா கமிஷனே விஞ்ஞானபூர்வ ஊழல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஊழல் செய்து, பல கோடி ரூபாய் அரசுப் பணத்தை வீணடித்தது திமுக ஆட்சியில்தான். எனவே, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும், வீண் பழியையும் சுமத்த எந்தத் தகுதியும் இல்லை.

கனிமொழிக்குப் பார்வைக் கோளாறு

‘வந்துட்டாங்கையா... வந்துட்டாங்க’ என நடிகர் வடிவேலு பாணியில், தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். முதல்வர் தொகுதியில் எந்தத் திட்டப் பணிகளையும் செய்யவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் பேசியுள்ளார். மாதத்துக்கு ஒரு முறை எடப்பாடி தொகுதிக்கு வந்து, அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக், நகராட்சி, ஊராட்சிக் கட்டிடம், புதிய குடிநீர்த் திட்டங்கள், 100 ஏரிகளுக்குக் காவிரி உபரி நீர் கொண்டு வரும் திட்டம் என ஏராளமான மக்கள் நலத்திட்டங்களையும், திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்துள்ளேன்.

ஆனால், எந்தத் திட்டமும் மேற்கொள்ளவில்லை என்று கூறும் திமுக எம்.பி. கனிமொழிக்குப் பார்வைக் குறைபாடு உள்ளதாகத் தோன்றுகிறது.

குடும்ப ஆட்சி இனி தமிழகத்தில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார். ஸ்டாலினைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும் குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மூத்த, முன்னாள் அமைச்சர்கள் நேரு உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினிடம் குனிந்து பவ்யமாகப் பேசுவது, இது பாரம்பரியமிக்க திமுகவா என எண்ணத் தோன்றுகிறது''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x