

ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு குறித்துப் பேட்டி அளித்தபோது, அவருடன் நின்ற பாஜக அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவரான அர்ஜுனமூர்த்தியை மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் பாஜகவிலிருந்து விலகினார்.
ரஜினி மக்கள் மன்றம் தொடங்கிய ரஜினிகாந்த், அரசியல் கட்சியைத் தொடங்காமல் அறிவிப்பு வெளியிடாமல் இருந்துவந்தார். கடந்த நவ.30ஆம் தேதி அன்று ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளைக் கேட்டார்.
இந்தக் கூட்டத்தில் தனது உடல் நிலை, நேரடி அரசியலில் ஈடுபட முடியாத நிலை, அரசியல் கட்சியைத் தொடங்குவதா? உடல்நிலையைப் பார்ப்பதா? ஆகியவை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. உடல்நிலை முக்கியம் எனவும், ஆனாலும் அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து ரஜினியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பின்னர் போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டியில், “மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். நானும் என்னுடைய பார்வையை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று மன்ற நிர்வாகிகள் தெரிவித்தார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக எனது முடிவை அறிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முடிவை ரஜினி தெரிவித்துள்ளார். அதில் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிச.31 அன்று வரும் என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார்.
அப்போது அவருடன் தமிழருவி மணியனும், பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவர் அர்ஜுனமூர்த்தியும் இருந்தனர். பின்னர் பேட்டி அளித்த ரஜினி, தமிழருவி மணியன் தனது பணியில் மேற்பார்வையாளராகச் செயல்படுவார் எனத் தெரிவித்தார்.
பின்னர் அர்ஜுனமூர்த்தியை அறிமுகப்படுத்தி, ''இவர் கிடைத்ததற்கு நான் ரொம்பக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இவரை ரஜினி மக்கள் மன்றத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளேன்'' என்று அறிவித்தார். ஆனால், அவர் பாஜகவில் வகிக்கும் பொறுப்பு பற்றிக் குறிப்பிடவில்லை.
அப்போது செய்தியாளர்கள் அர்ஜுனமூர்த்தியிடம் பாஜகவிலிருந்து விலகிவிட்டீர்களா? எனக் கேட்டனர். ஆனால், அவர் அதற்குப் பதிலளிக்காமல், தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான அத்தனை முயற்சிகளும் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர் யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்தனர். பாஜகவில் இருப்பவர் எப்படி ரஜினி மக்கள் மன்றத்தில் என்ற கேள்வியை எழுப்பினர்.
இந்நிலையில் பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் அர்ஜுனமூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று அவரை பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விடுவிப்பதாகவும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரிடம் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தார்.