

ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துக்கால், குருசடை தீவுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வீசிய புரெவி புயல் காற்றினால் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன.
வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவிப் புயலாகி கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே புயலாகக் கரையைக் கடக்கும் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்கிழமை 3-ம் எண் எச்சரிக்கை கூண்டும், தொடர்ந்து 7-ம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
புயல் மற்றும் கடல் சீற்றத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்லக் கூடாது என்றும் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
தொடர்ந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபம், பாக்ஜசலசந்தி, ராமேசுவரம் கடற்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் பாலத்தைக் கடந்து குந்துக்கால் மற்றும் குருசடை தீவு அருகே 300-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை பாம்பன் கடற்பகுதியில் புரெவிப் புயலினால் வீசிய பலத்த காற்றினால் பாம்பன் குந்துக்கால் மற்றும் குருசடை தீவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துடன் பல படகுகள் தரை தட்டி நின்றன.
தொடர்ந்து பாம்பன் கடற்பகுதியில் ( வியாழக்கிழமை மாலை நிலவரப்படி) 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்தால் மீனவர்கள் தங்கள் படகுகளை உடனடியாக மீட்க முடியவில்லை.
புயல் முற்றிலுமாக பாம்பன் கரைப் பகுதியை கடந்த பின்னர் தான் மீனவர்கள் தங்களின் படகுகளின் சேத அளவை தெரிந்து கொள்ள முடியும் எனத் தெரிகிறது.