

உங்களுடைய முழு முயற்சியையும் காட்டுவீர்கள் என்று தெரியும் என, ரஜினியின் அரசியல் வருகைக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு செய்திகள், தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. சில தினங்களுக்கு முன்பு மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி. அதனைத் தொடர்ந்து தனது அரசியல் வருகை குறித்து ரஜினி எப்போது வேண்டுமானாலும் அறிக்கை விடலாம் என்ற சூழல் நிலவியது.
அதன்படி இன்று (டிசம்பர் 3) ரஜினி தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ரஜினியின் அரசியல் வருகைக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினியுடன் பல படங்களில் நடித்த அவரது நெருங்கிய தோழியும், பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அன்பார்ந்த ரஜினிகாந்த் அவர்களே, ஒரு வழியாக நீங்கள் அரசியலில் இறங்குகிறீர்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் முழு முயற்சியை இதில் காட்டுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும்".
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்