

கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடற்கரை கிராமங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் அனைத்து துறையினரும் உச்சகட்ட பாதுகாப்பில் ஈடுபட்டுளளனர்.
வங்கக் கடலில் உருவான புரெவி புயலால் கன்னியாகுமரி உட்பட கடற்கரை கிராமங்ளில் சூறைகாற்றுடன் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கடற்கரை கிராமங்கள், தாழ்வான பகுதிகள், அணை பகுதிகள், ஆற்று ஓரங்கள் என ஆபத்தான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடலோர கிராமங்களும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் கடற்கரை பகுதியில் நடமாட தடை விதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என மெரைன் போலீஸார், பேரிடர் மீட்பு குழுவினர், மற்றும் தமிழக பேரிடர் மீட்பு குழுவினர், வருவாய் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். கன்னியாகுமரி சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், முட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைபர், மற்றும் நாட்டு படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு மீனவர்களிடம் பேரிடர் மீட்பு குழுவினர் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கடலோரத்தில் இருந்து 20 மீட்டர் தூரத்திற்கு டிராக்டர்கள் உதவியுடன் படகுகள் இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் வலை, மற்றும் மீன்பிடி உபகரணங்களை எடுத்து மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் வைத்தனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீறி யாரும் கடற்கரைப் பகுதிக்கு சென்றுவிடாமல் இருக்கும் வகையில் கன்னியாகுமரி ரவுண்டானா, சூரிய அஸ்தமன மையத்திற்கு செல்லும் இடம் ஆகியவை தடுப்பு வேலிகளால் அடைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன.
விவேகானந்தர் பாறைக்கான படகுப் போக்குவரத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி மட்டுமின்றி வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு என குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் வெறிச்சோடின.
குமரி மா£வட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, பத்மநாபபுரம், குளச்சல் குழித்துறை நகராட்சி, 55 பேரூராட்சிகள், 95 கிராம ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வாகனத்தில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கியில் புயல் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குமரி கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், எஸ்.பி. பத்ரிநாராயணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து பகுதிகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், தேங்காய்பட்டணம், வள்ளவிளையில் இருந்து சென்றிருந்த 161 விசைப்படகுகளில் 130க்கும் மேற்பட்ட படகுகள் ஆழ்கடலில் இருந்து கரை திரும்பியுள்ளன. மீதமுள்ள படகுகள் போதிய கதவல்கள் கிடைக்காமல் இருந்தன.
இவற்றில் 20 படகுகள் கேரளா, மற்றும் லட்சத்தீவு, கர்நாடகா பகுதிகளில் மீன்பிடித்து வருவதாகவும், இவற்றை மீட்பதற்காக இந்திய கடற்படை
மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.
இது தவிர 10-க்கும் மேற்பட்ட படகுகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சேட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்டு அவற்றை மீட்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.