Published : 29 Oct 2015 09:08 AM
Last Updated : 29 Oct 2015 09:08 AM

நீதிபதிகளை அவமதித்ததாக வழக்கு: நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வைரமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் நடந்த விழா ஒன்றில், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசம் பிறந்த நாள் விழா மற்றும் தபால் தலை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ராமனைப் போல சில நீதிபதிகள் உள்ளனர். அந்தளவுக்கு நேர்மையாக இருக்கின்றனர். நெருப்பு போன்ற அவர்களைப் பற்றி யாராவது பேசினால், பேசியவர்களின் நாக்கு எரிந்துவிடும். சில நீதிபதிகள் ஓய்வுபெறுவதற்கு 6 மாதம் முன்பு வரை அப்படித்தான் இருக்கின்றனர். பிறகு நேர்மையை விற்றுவிடுகிறார்கள். இப்படிச் செய்தால் நாட்டின் நிலைமை என்னவாகும். நீதித்துறையை சமுதாயம் கவனித்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

இது, ஓய்வுபெறும் நிலையில் உள்ள நீதிபதிகள் மீது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. ஓய்வுபெறும் நிலையில் உள்ள அனைத்து நீதிபதிகளுமே ஊழல் செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. மக்களால் கடவுளாகப் போற்றப்படும் நீதிபதிகளைப் பற்றி இவ்வாறு பேசினால் அவர்கள் மீதான நல்லெண்ணம் சிதைந்துவிடும். நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் மாண்பைக் குலைக்கும் வகையில் பேசிய கவிஞர் வைரமுத்து மீது, நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி கோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு கவிஞர் வைரமுத்து நான்கு வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் (Statutory Notice) அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x