5 தென்மாவட்டங்களில் 490 நிவாரண மையங்களில் 1.92 லட்சம் பேரை தங்க வைக்க ஏற்பாடு: வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

5 தென்மாவட்டங்களில் 490 நிவாரண மையங்களில் 1.92 லட்சம் பேரை தங்க வைக்க ஏற்பாடு: வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
Updated on
2 min read

ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 490 நிவாரண மையங்களில் 1.92 லட்சம் மக்கள் தங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று தெரிவித்தார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயலை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் தலைமை வகித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின் போது கடலில் உருவாகின்ற புயல்களை எதிர்கொண்டு மக்களை பாதுகாக்கின்ற மகத்தான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார்.

இயற்கை இடர்பாடுகளை கையாளுவதில் புதிய இலக்கணத்தை இந்தியாவுக்கே முன்மாதிரியாக உருவாக்கி தந்துள்ளார். கடந்து சென்ற நிவர் புயலில் உயிர் மற்றும் பொருள் சேதம் இல்லாமல் மக்களைப் பாதுகாத்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடியே பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4000 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கபடக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 36 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதுதவிர்த்து கடலோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள மக்களை எல்லாம் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களில் 490 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவைகளில் சுமார் 1.92 லட்சம் நபர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் 20 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 2 முகாம்களில் 150 நபர்கள் தங்க வைக்கபட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவுகள் வழங்கபட்டு வருகிறது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை நிவாரண மையங்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் தாங்கள் இருக்கும் இடம் பாதுகாப்பனாதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒரு சதவிதம் சந்தேகம் ஏற்பட்டாலும்கூட அரசு ஏற்பாடு செய்துள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக சென்றுவிட வேண்டும் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் புயல் காலங்களில் தென் மாவட்ட மக்கள் வெளியே வர வேண்டாம் என்ற வேண்டுகோளும் வைத்துள்ளார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

100 சதவிதம் பாதுகாப்பாக நாம் இந்த புயலை எதிர்கொள்ள வேண்டும். நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். செல்பி எடுக்க வேண்டாம். இதை மக்கள் கடைபிடித்து உரிய பாதுகாப்பாக புயலை எதிர்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் உதயகுமார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக அரசின் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தான் நிவர் புயலால் ஒரு சதவித பாதிப்பு கூட ஏற்படாத வகையில் வரலாற்றிலே ஒரு சிறப்பான நிலையை தமிழக அரசு உருவாக்கி காட்டியுள்ளது.

அதேபோல் புரெவி புயலை எதிர்கொள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து துறைகளும் முழு அளவில் தயாராக உள்ளன என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட தலா ரூ.20 லட்சம் மதிப்பிலான மூன்று 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கி இந்த ஆம்புலனஸ் வாகனங்களை இரு அமைச்சர்களும் தொடங்கி வைத்தனர்.

இந்த வாகனங்கள் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மற்றும் எப்போதுவென்றான், தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.15 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பண பரிவர்த்தனை மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான அரசு முதன்மை செயலர் குமார் ஜெயந்த், காவல் துறை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான ஐஜி சாரங்கன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in