ஊழல் செய்து கொள்ளையடித்தவர்கள் மீது திமுக ஆட்சியில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்: திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி 

திண்டுக்கல் அருகே பெரியகோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.
திண்டுக்கல் அருகே பெரியகோட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி.
Updated on
1 min read

அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து கொள்ளையடித்தவர்கள் மீது திமுக ஆட்சியில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும், என திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பெயரில் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக வினர் இன்று தொடங்கினர்.

திண்டுக்கல்லில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார்.

இவருடன் மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வேலுச்சாமி எம்.பி., ஆகியோர் உடன் சென்றனர்.

திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட பெரியகோட்டை கிராமத்தில் வேளாண்மை பணியில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார். சீலப்பாடி கிராமத்தில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தில் பணிபுரிந்துகெண்டிருந்த பெண்களை சந்தித்து பேசினார்.

ரேஷன் கடைகளில் முறையாக பொருட்கள் தருவதில்லை என பெண்கள் குற்றஞ்சாட்டினர்.

விவசாயிகளை சந்தித்துப் பேசுகையில், மத்திய அரசு மின்சாரத்தை தனியார்மயமாக்குவதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்தார். தற்போதைய ஆட்சியின் அவலநிலை குறித்தும் பேசினார்.

தொடர்ந்து திண்டுக்கல்லில் பூட்டு மற்றும் நெசவுத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். மாலையில் திண்டுக்கல் அனைத்து வர்த்தகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

பிரச்சாரத்தைத் தொடங்கும் முன்பு திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா பரிசோதனை கருவி வாங்கியதில் ஊழல் செய்த அதிமுக அரசு வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்றுவிடலாம் என நினைப்பது நடக்காது. அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.

அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து கொள்ளையடித்தவர்கள் மீது திமுக ஆட்சியில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டமாக உள்ளது.

அரசியல் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்பதற்காகவே ஊரடங்கை இந்த அரசு நீட்டித்துவருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in