

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து மதுரையில் ரஜினி ரசிகர்கள். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2017 டிசம்பரில் நடிகர் ரஜினிகாந்த், 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என அறிவித்தார். ஆனால், அதன்பின்னர் கட்சி நடவடிக்கைகளில் ஏதும் இறங்கவில்லை. மக்களவைத் தேர்தலில் கூட மவுனமாகவே இருந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாகக் கூறினார்.
இந்நிலையில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முடிவை ரஜினி தெரிவித்துள்ளார். அதில் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிச.31 அன்று வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போ இல்லைன்னா.. எப்பவுமே இல்லை என்ற அவரின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் அறிவிப்பைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மதுரை அண்ணா நிலையம் எதிரே உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் இனிப்பு வழங்குகின்றனர்.