

கனமழை காரணமாகக் கடலூர் மாவட்டக் காவல் நிலையங்களில் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் மழைநீர் தேங்காத வகையிலும், போக்குவரத்தைச் சரி செய்யும் வகையிலும் அந்தந்தப் பகுதி போலீஸார், மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள 46 காவல் நிலையங்களிலும் ஜேசிபி, கயிறு, மண்வெட்டி, மரம் அறுக்கும் வாள் உள்ளிட்ட மழை மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல அந்தந்தப் பகுதி போலீஸாரும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே குள்ளஞ்சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட டி.பாளையம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார், அப்பகுதிக்குச் சென்று ஜேசிபி மூலம் மழைத் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.