

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரையில் பாஜக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை தந்தார். அப்போது, அதிமுகவுடனான பாஜக கூட்டணி தொடரும் என்பதை அறிவித்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோக்கும் பாஜக 40 தொகுதிகள் வரை கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தொகுதி ஒதுக்கீடு பற்றிய உறுதியான தகவல் ஏதும் வெளியாகாவிட்டாலும் மதுரையில் பாஜக தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதாவிற்கு மதுரை வடக்குத் தொகுதி ஒதுக்கப்படும் சூழல் உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆர் ஸ்ரீநிவாசன் தலைமையில் இன்று கட்சியினர் இத்தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கினர்
செல்லூர் பகுதியிலுள்ள கட்சியின் சில வார்டு செயலாளர் மற்றும் தொண்டர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற நிர்வாகிகள் கட்சிப் பணிகள் குறித்து விவாதித்தனர்.
மேலும் செல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொகுதி தேர்தல் அலுவலகத்தையும் திறந்து வைத்தனர்.
இதில் கட்சி நிர்வாகிகள் மாநகர தலைவர் சீனிவாசன் புதுச்சேரி பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்