

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.3) பகல் வேளையில் விட்டுவிட்டு லேசாக மழை பெய்தது. அதன்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் தொடங்கி, இன்று காலை 7 மணி வரை மழை பெய்தது. இந்த மழையால் இரவு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. நேற்று இரவு தொடங்கி தற்போது வரை மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும், சாலையில் உள்ள பள்ளங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 21.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக துவாக்குடியில் 43 மி.மீ. மழை பதிவாகியது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
திருச்சி நகரம் 33, நந்தியாறு தலைப்பு 32.8, சமயபுரம் 32.4, கல்லக்குடி 30.3, புள்ளம்பாடி 29.4, லால்குடி 29, தேவிமங்கலம் 28, பொன்னணியாறு அணை 27.8, தாத்தையங்கார்பேட்டை, திருச்சி ஜங்ஷன் தலா 26, மருங்காபுரி 25.4, பொன்மலை 24, விமான நிலையம் 23.3, வாத்தலை அணைக்கட்டு, நவலூர் குட்டப்பட்டு தலா 18, முசிறி 16, மணப்பாறை 15.4, புலிவலம், சிறுகுடி தலா 15.