புரெவி புயல் முன்னெச்சரிக்கை: முதல்வர் பழனிசாமியிடம் அமித் ஷா விசாரிப்பு 

முதல்வர் பழனிசாமி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா | கோப்புப் படம்.
முதல்வர் பழனிசாமி - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா | கோப்புப் படம்.
Updated on
3 min read

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (3.12.2020) காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடையே இலங்கை கடற்கரையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்தது. தற்போது தற்போது தமிழகக் கடற்கரைப் பகுதியான பாம்பனுக்கு தென்கிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் பாம்பன் பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

புரெவி புயல், பிற்பகலுக்கு முன்னதாக பாம்பனை நெருங்கும் என்றும், பிற்பகலுக்கு மேல் தென் தமிழகக் கடலோரப் பகுதியை ஒட்டியே நகர்ந்து கன்னியாகுமரி - பாம்பன் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மழை அறிவிப்பு

நாளை (4-ம் தேதி) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

5-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங் களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த இரு நாட் களுக்கு வானம் பொதுவாக மேகமூட் டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பாதுகாப்பு முன்னேற்பாடுகள்

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தென் மாவட்டங்கள் உச்சகட்ட உஷார்நிலையில் உள்ளன. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகள், மலையோரங்கள், தாழ்வான பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற விசைப் படகுகள் கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கர்நாடகா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா, கேரளா போன்ற பகுதிகளில் கரை திரும்பியுள்ளன. 106 விசைப்படகுகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவை இதுவரை கரைதிரும்பாமல் உள்ளன. மேலும், 14 படகுகள் தொடர்புகொள்ள முடி யாத இடத்தில் இருப்பதாக, இந்திய கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களை மீட்பதற்கான தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் கடைகள், ஓட்டல்கள் அனைத்தையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கான படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. முன்னெச்சரிக்கையாக தனுஷ்கோடியில் இருந்து மீனவ மக்கள் 360 பேரை பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் வெளியேற்றி ராமேசுவரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். தனுஷ்கோடி சாலையும் மூடப்பட்டது.

முதல்வரிடம் பிரதமர் ஆலோசனை

‘புரெவி’ புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களான தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''தமிழக முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். ‘புரெவி’ புயலால் பாதிக்கப்படும் தமிழகப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன். மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் தமிழகத்துக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

அமித் ஷா விசாரிப்பு

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமித் ஷா பேசினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (3.12.2020) காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

அப்பொழுது முதல்வர் பழனிசாமி, புரெவி புயல் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in