Published : 03 Dec 2020 10:47 AM
Last Updated : 03 Dec 2020 10:47 AM

புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பனை நெருங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புரெவி புயல் கரையைக் கடக்கும் திசைக்கான வரைபடத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது: படம் உதவி | ட்விட்டர்.

சென்னை

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் அடுத்த 3 மணி நேரத்தில் பாம்பனை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடையே இலங்கை கடற்கரையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்தது. தற்போது தற்போது தமிழகக் கடற்கரைப் பகுதியான பாம்பனுக்கு தென்கிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் பாம்பன் பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:

''தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல், மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று இலங்கையின் திரிகோணமலைக்கு வடக்கே நேற்று இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடையே மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகக் காற்றுடன் கரையைக் கடந்தது.

பாம்பனுக்கு கிழக்கு, மற்றும் தென்கிழக்கில் சுமார் 200 கி.மீ. தொலைவில் நேற்று புரெவி புயல் நிலை கொண்டிருந்தது. இது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, திரிகோணமலையிலிருந்து வடமேற்கில் 60 கி.மீ. தொலைவிலிலும், பாம்பனுக்கு கிழக்கு, தென்கிழக்கில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இன்று காலை 5.30 மணி அளவில் மன்னார் வளைகுடாவின் கிழக்கே 40 கி.மீ. தொலைவிலும், பாம்பனுக்கு கிழக்கு, மற்றும் தென்கிழக்கில் 120 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 320 கி.மீ. தொலைவிலும் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது.

இந்த புரெவி புயல் நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் மன்னாள் வளைகுடா பகுதியை நெருங்கும். அதாவது பாம்பன் கடற்பகுதியை இன்று நண்பகலில் புரெவி புயல் அடையும். இதனால், தெற்கு தமிழகக் கடற்கரை முழுவதும் இன்று இரவு மற்றும் 4-ம் தேதி காலைவரை கனமழை பெய்யும்”.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புரெவி புயல் காரணமாக சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (4-ம் தேதி) தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

5-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x