

மாணவர்களுக்கும், இளைஞர்க ளுக்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்யும் வகையில் அப்துல் கலாம் பெயரில் அவரது உறவினர்கள் புதிய அறக்கட்டளையை ஏற்படுத்தி உள்ளனர். இதை இசையமைப்பாளர் இளையராஜா சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் அவர் பெயரிலான புதிய அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கலாமின் அண்ணன் வழி பேத்தி டாக்டர் நசீமா மரைக்காயர் தலைமை தாங்கினார். அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், பிரதமரின் முன்னாள் ஆலோசகர் விஜயராகவன், கலாமின் நண்பர் சம்பத்குமார், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சின்மயா ஹெரிடெஜ் சென்டர் தலைவர் மித்ரானந்தா, ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர ரத்னு, கல்வியாளர் திருமதி ஒய்ஜிபி ஆகியோர் கலாம் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். நடிகர் சிவ கார்த்திகேயன், தன் வாழ்க்கையில் கலாம் ஏற்படுத்திய தாக்கங்களை எடுத்துரைத்தார்.
கலாமின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து “டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேஷன்” என்ற புதிய அறக் கட்டளையை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அறக்கட்டளையை இசை யமைப்பாளர் இளையராஜா தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அப்துல் கலாம் 4 கோடி மாணவர் களை சந்தித்துள்ளார். இதுபோன்று உலகில் எந்த தலைவரும் இவ்வளவு எண்ணிக்கையிலான மாணவர்களை சந்தித்தது கிடை யாது. சாதாரணமாக நடிகர்களுக்கு அவர்களின் ரசிகர்கள் கட் அவுட் வைப்பார்கள். இதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அவர்கள் சார்ந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட் அவுட் வைப்பது வழக்கம். ஆனால், கலாம் இறந்தபோது இந்தியா முழுவதும் ஒவ்வொரு தெருக்களிலும் அவரது படங்களை வைத்து அனைத்து மக்களும் அஞ்சலி செலுத்தினார்களே, ஒவ்வொருவரும் கலாமை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதியதே இதற்குக் காரணம்.
இவ்வாறு இளையராஜா கூறினார்.