

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுசிலிண்டர் விலையை மாதம்தோறும் மாற்றி அமைத்து வரு கின்றன.
கடந்த மார்ச் மாதம் கரோனாவைரஸ் தொற்று காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைந்தது. பின்னர், ஜூன், ஜூலை மாதங்களில் விலை அதிகரித்தது. எனினும், கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.610-ல் இருந்து ரூ.660 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.56.50 உயர்ந்து ரூ.1,410.10-க்கு விற் பனை செய்யப்படுகிறது.