

நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். அரசியலுக்கு வரும் விஷயத்தில், உடல்நலனுக்கு ஊறு விளைவிக்காதபடி சிந்தித்து முடிவெடுக்குமாறு ஆலோசனை கூறியதாக அவர் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அதுபற்றி ரஜினி கூறியபோது, ‘‘மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளை கேட்டறிந்தேன். என் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டேன். தமிழக அரசியலில் ஈடுபடுவது தொடர்பான எனது முடிவை இயன்றவரை விரைவாக தெரிவிப்பேன்’’ என்றார்.
இந்நிலையில், ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது.
ரஜினியை சந்தித்துவிட்டு வெளியே வந்த தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக மக்களிடம் எதையும் மறைத்து வாழ வேண்டிய அவசியம் ரஜினிக்கு கிடையாது. அவரும் அப்படிப்பட்டவர் அல்ல.தன் மனதில் பட்டதை கூறக்கூடியவர். மக்கள் நலனுக்காக அவர்எதை நினைக்கிறாரோ, அதைத்தான் இதுவரை சொல்லி இருக்கிறார். அதேபோல தன் உடல்நலனில் உள்ள பிரச்சினைகளையும் மக்களிடம் வெளிப்படுத்தினார்.
அவரது உடல்நிலையில் எனக்கும் அதிக அக்கறை உள்ளது. அதனால், ‘‘உங்கள் உடல்நலன்தான் மிகவும் முக்கியம். எனவே, அரசியலுக்கு வரும் விஷயத்தில், உடல்நலனுக்கு ஊறு விளைவிக்காதபடி சிந்தித்து முடிவெடுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டேன். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி அவரே சொன்னால்தான், உங்களோடு சேர்ந்து நானும் தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.