

தமிழகத்துக்கு ஐந்து மாதங்களில் விடியல் பிறக்கும் என, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
திமுக மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரச்சார பயணத்துக்காக, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசியதாவது:
உயர்மின் கோபுரங்களால் இப்பகுதியில் வாழ்ந்துவரும் விவசாயிகளின் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நியாயம் கேட்டு விவசாயிகள் போராடுகின்றனர்.
விளைநிலங்கள் நடுவே குழாய்கள் பதிப்பதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிவித்துள்ளது. விவசாய நிலங்கள் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வே பெரும் போராட்டமாக உள்ளது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. விவசாயிகளை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக விற்கும் சட்டங்கள் இவை. இந்த சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். உணவுப் பாதுகாப்பு இல்லாத சட்டத்தை, ஆதரித்து பேசியுள்ள ஒரே கட்சி அதிமுகதான். 5 மாதங்கள் பொறுங்கள், தமிழகத்துக்கு விடியல் பிறக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.