

பொது சொத்துகளுக்கு சேதம்விளைவித்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் ஆங்காங்கே பாமகவினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் உள்ளிட்ட பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.
இந்நிலையில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். அப்போது இது தொடர்பான மனுவை அவசர வழக்காக விசாரி்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டால் அந்த வழக்கை எந்த அமர்வு விசாரிக்கும் என பதிவுத்துறை முடிவு செய்யும் என்று தெரிவித்தனர்.
நிர்வாகிகள் மீது வழக்கு
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கம் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். மேலும் பொது சொத்துகளுக்கு சேதம்விளைவித்தவர்கள் மீதும், போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.