Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினத்தின் 232-வது மடாதிபதி திருவம்பல தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள் மறைவு: நித்யானந்தா பக்தர்களை வெளியேற்ற நடவடிக்கை

ஞானப்பிரகாச சுவாமிகள்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினத்தின் 232-வது மடாதிபதி திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் (87) நேற்று முக்தி அடைந்தார். அவரதுஇறுதிச் சடங்கு இன்று நடைபெறஉள்ளது.

தொண்டை மண்டல முதலியார் சமூகத்து பழமையான மடமாக தொண்டை மண்டல ஆதின மடம் செயல்பட்டு வந்தது. இந்த மடத்தின் 232-வது மடாதிபதியாக திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் இருந்துவந்தார்.

இந்நிலையில் கடந்த 20-ம் தேதி ஞானப்பிரகாச சுவாமிகள் நாற்காலியில் அமர்ந்திருந்து எழுந்திருக்கும்போது கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறுவை சிகிச்சைசெய்ய வேண்டி இருந்ததால் கடந்த 22-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நல்லடக்கம் இன்று நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புநித்யானந்தாவின் சீடர்கள் இந்த மடத்துக்கு வந்து தங்கினர். இந்தமடத்துக்கு பல நூறு கோடி சொத்துகள் இருப்பதால் அவர்கள் மடத்தை கைப்பற்ற முயல்வதாக கூறி இந்த மடத்தின் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அப்போது ஞானப்பிரகாச சுவாமிகள் தன் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் தங்கியிருப்பதாக கூறி அவர்களை அனுமதித்தார். மடத்தில் தங்கியிருப்பதால் அவர்கள் மடத்துக்கு உரிமை கோர முடியாது. அவர்கள் சில காலம் தங்கியிருந்து இங்கிருந்து சென்றுவிடுவர் என்று கூறி அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதைத் தொடர்ந்து சில பக்தர்கள் அங்கேயே தங்கி இருந்தனர்.

தற்போது ஆதினம் முக்தியடைந்ததைத் தொடர்ந்து அந்த மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நித்யானந்தா பக்தர்களால் ஏதேனும் தொந்தரவு உள்ளதா என்பது குறித்தும் மடத்தின் பக்தர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த மடத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அனுமதியுடன் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழு ஒன்று செயல்படுகிறது. அக்குழுவின் உறுப்பினர் குப்புசாமி கூறும்போது, “ஓரிரு மாதத்தில் இந்த மடத்துக்கு மடாதிபதி தேர்வு செய்யப்படுவார். சுவாமிகள் நல்லடக்கம் முடிந்ததும் மடத்தில் உள்ள நித்யானந்தா பக்தர்கள் சென்றுவிடுவதாக கூறியுள்ளனர். இல்லையெனில் அவர்கள் வெளியேற்றப்படுவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x