Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி சென்னையில் பாமக 2-வது நாளாக போராட்டம்: கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கைது

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி, 2-வது நாளாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: க.பரத்

சென்னை

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக, வன்னியர் சங்கம் சார்பில் டிச.1-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். அதன்படி, சென்னை மன்றோ சிலை அருகே கடந்த 1-ம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த கட்சியினரை போலீஸார் சென்னை புறநகர் பகுதிகளில் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. பெருங்களத்தூரில் ரயிலை மறித்து பாமகவினர் கற்களை வீசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 2-வது நாளாகநேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம்அருகே போராட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் வடக்கு மண்டலஇணை பொதுச் செயலாளர்ஏ.கே.மூர்த்தி உட்பட பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதில் ஜி.கே.மணி பேசியதாவது: தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கு முன்பு,கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். இது அடிப்படை உரிமைகோரும் வாழ்வுரிமை போராட்டம்.

அனைத்து சமுதாயங்களுக்காகவும் ராமதாஸ் போராடி வருகிறார். வன்னியர்களுக்கு 20 சதவீததனி இடஒதுக்கீடு முதல்வர் வழங்குவார் என நம்புகிறோம். இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தடையை மீறி போராட்டம் நடத்தியதால் ஜி.கே.மணி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x