

ஆம்பூர் அருகே வனப் பகுதியில் சாராயம் காய்ச்ச பயன் படுத்தப்படும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் அங்குள்ள சாராய கிடங்கினை தீ வைத்து எரித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தின் தென்மேற்கு எல்லையில் உள்ள மேல்குப்பம் ஊராட்சியையொட்டி மாதகடப்பா காப்புக்காடுகள் உள்ளன.
மேல்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட தரைக்காடு பகுதியில் இருந்து ‘‘சுமை தூக்கும் கழுதைகள்’’ மூலம் சாராயம் காய்ச்ச தேவையான வெல்லம் மூட்டைகள் மற்றும் மரப்பட்டைகள் காப்புக்காடு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வனப் பகுதியில் சாராயம் காய்ச்சி அங்கிருந்து, அதே கழுதைகள் மூலம் சாராய கேன்கள் தரைக்காடு பகுதிக்கு கொண்டு வரப்படுவ தாகவும், இத்தொழிலில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கேன்களில் கொண்டு வரப் படும் சாராயம், தரைக்காடு பகுதியில் உள்ள மொத்த வியாபாரி களின் கொட்டகைகளில் சேமித்து வைக்கப்பட்டு, பிறகு, இங்கிருந்து பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து சில்லரை வியாபாரி களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
இங்கிருந்து, ஆம்பூர், வெங்கடசமுத்திரம், வடச்சேரி, அரங்கல் துருகம், வாணியம்பாடி, ஆலங் காயம், நாட்றாம்பள்ளி வரை இருசக்கர வாகனங்களில் சாராய பாக்கெட்டுகள் கொண்டு செல்லப் பட்டுவிற்பனை செய் யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த பகுதிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களாக இருப்பதால், காவல் துறையினர், மதுவிலக்கு தடுப்புப்பிரிவினர், வனத் துறை யினர் அங்கு சென்று சாராய தொழிலை தடுக்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சாராயம் தயாரிக்கும் கும்பல் மாதகடப்பா காப்புக்காடுகளில் பல்வேறு இடங்களில் சாராயத்தொழிற்சாலை அமைத்து சாராய தொழிலை விரிவுப்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஆம்பூர் வனச்சரகர் மூர்த்தி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தரைக்காடு பகுதிக்கு நேற்று காலை சென்றனர். அங்கு வனப் பகுதிக்குள் 2 குழுக்களாக பிரிந்து ஆய்வு நடத்தினர். அப்போது, தரைக்காடு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சாராய கும்பல் அமைத்த கொட்டகை பகுதிக்கு சென்ற வனத்துறையினர், அங்கு பதுக்கி வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும், அங்கிருந்த சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் வெல்லம் மூட்டைகள், மரப் பட்டைகள் ஆகியவற்றை பறி முதல் செய்தனர். பின்னர், கொட்டகைக்கு வனத்துறையினர் தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து, மூட்டைகளை தூக்கி செல்ல பயன்படுத்தும் சுமைதூக்கும் கழுதைகளை பிடித்து வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், சாராயத் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.