சிவகங்கை வரும் முதல்வர் பழனிசாமி காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிப்பாரா?

சிவகங்கை வரும் முதல்வர் பழனிசாமி காரைக்குடியை மாநகராட்சியாக அறிவிப்பாரா?
Updated on
1 min read

சிவகங்கைக்கு நாளை (டிச.4) வருகைதரும் முதல்வர் பழனிசாமி காரைக்குடியை மாநகராட்சியாகவும், சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாகவும் அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகங்கை மாவட்டமாகப் பிரிந்த பின் 1988-ம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013 -ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சிக்கு தற்போது ரூ.10 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் வருகிறது.

மேலும் அதனையொட்டி சங்கராபுரம், கோவிலூர் ஊராட்சிகள், கோட்டையூர் பேரூராட்சி நகரின் விரிவாக்கப் பகுதிகள் உள்ளன. இதையடுத்து காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வலியுறுத்தி 2015 மே 28-ம் தேதி அப்போதைய நகராட்சித் தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது.

மேலும் காரைக்குடி நகராட்சியுடன் கோட்டையூர் பேரூராட்சி மற்றும் சங்கராபுரம், கோவிலூர், அரியக்குடி, இலுப்பக்குடி, அமராவதி புதூர் ஆகிய ஊராட்சிகளின் பகுதிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, காரைக்குடி நகராட்சி- 1.06 லட்சம் பேர், கோட்டையூர் பேரூராட்சி- 14,766, சங்கராபுரம்-13,793, கோவிலூர்-5,203, இலுப்பக்குடி 3,989, அரியக்குடி-3,660, அமராவதி புதூர்-9221 பேர் என, மொத்தம் 1.57 லட்சம் பேர் இருந்தனர். தற்போதைய நிலவரப்படி, 2 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர்.

இந்நிலையில் காரைக்குடியை மாநகராட்சியாக அறிவித்து விரிவாக்கம் செய்தால் ஆண்டு வருவாயும் ரூ.15 கோடியாக அதிகரிக்கும். அதேபோல் சிவகங்கை முதல்நிலை நகராட்சியைத் தேர்வுநிலை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கையும் உள்ளது. சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகள், கொட்டகுடிகீழ்பாத்தி ஊராட்சியில் கொட்டகுடி, சூரக்குளம்- புதுக்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ராகிணிப்பட்டி, பையூர், இடையமேலூர் ஊராட்சி காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்க வேண்டுமென 2014-ம் ஆண்டு அப்போதைய நகராட்சித் தலைவர் அர்ச்சசுனன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிவகங்கை நகராட்சி-42,053 பேர், காஞ்சிரங்கால் 4,130, வாணியங்குடி 5,582பேர் மற்றும் பையூர், ராகிணிப்பட்டி, காந்திநகர் பகுதிகளில் 1,400 பேர் என, 53 ஆயிரம்இருந்தனர். தற்போதைய நிலவரப்படி 90 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போது சிவகங்கை நகராட்சியின் ஆண்டு வருவாய் 5 கோடி ரூபாயாக உள்ளது. தேர்வுநிலை நகராட்சியாக அறிவித்து விரிவாக்கம் செய்தால் வருவாய் ரூ.7 கோடியாக அதிகரிக்கும்.

இந்நிலையில் நாளை சிவகங்கை வரும் முதல்வர் பழனிசாமி காரைக்குடியை மாநகராட்சியாகவும், சிவகங்கையைத் தேர்வுநிலை நகராட்சியாகவும் அறிவிக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in