Published : 02 Dec 2020 06:59 PM
Last Updated : 02 Dec 2020 06:59 PM

மதுரை மக்கள் இனி வீட்டுக்குள்ளேயே செம்பில் தண்ணீர் பிடித்துக் குடிக்கலாம்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை மக்கள் இனி அண்டா, குண்டா அனைத்தையும் மூலையில் போட்டுவிட்டு வீட்டிற்குள்ளேயே செம்பில் தண்ணீர் பிடித்துக் குடிக்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் ரூ.1,295 கோடியில் நிறைவேற்றப்படும் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் (டிச.4) தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ''மதுரையில் நாளை மறுநாள் முதல்வர் தொடங்கி வைக்க உள்ள முல்லைப் பெரியாறு திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடே இல்லை என்ற நிலை ஏற்படும். லோயர் கேம்ப்பில் இருந்து 152 கிலோ மீட்டர் தூரம் பைப் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும்.

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 185 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைக்கும். இதற்கான திட்டப் பணிகளுக்காண டெண்டர் முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில் பணிகள் 36 மாதங்களில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.

இனிமேல் மதுரை மக்கள் தண்ணீர் எடுக்கும் அண்டா, குண்டா அனைத்தையும் மூலையில் போட்டுவிட்டு வீட்டிற்குள்ளேயே செம்பில் தண்ணீர் பிடித்துக் குடிக்கலாம். மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக 1,295 கோடி ரூபாயில் தொடங்கவுள்ள முல்லைப் பெரியாறு திட்டத்தினைப் போன்ற திட்டத்தினை இதுவரை எந்த முதல்வரும் எந்தக் காலத்திலும் மதுரைக்கு வழங்கியதே கிடையாது'' என்றார்.

அரசியல் பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, ''இது அரசு தொடர்பான நிகழ்ச்சி. ஆகவே இங்கு அரசியல் கேள்வி வேண்டாம்'' என்று தெரிவித்த அமைச்சர், ஆளும் கட்சி சார்பாகப் பொதுமக்கள் முதல்வரை வரவேற்க, விநியோகம் செய்ய உள்ள துண்டுப் பிரசுரத்தை அதே இடத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x