

சுய உதவிக்குழு பெண்களுக்கு இலவச செல்போன், வீடுகளுக்கு மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் அளிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன் னிட்டு திமுகவின் தேர்தல் அறிக் கையை தயாரிக்க முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் கனிமொழி, அ.ராமசாமி, ஆர்.சண்முகசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரை சாமி, என்.ஆர்.இளங்கோ, டி.கே.எஸ்.இளங்கோவன், தங்கம் தென்னரசு ஆகியோரைக் கொண்ட 9 பேர் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் கடந்த ஜூலை 27-ம் தேதி அறிவித்தார்.
இக்குழுவினர் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் திமுகவினர் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக குழுவின் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘விவசாயிகள், மீனவர்கள், நெச வாளர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், பெண்கள், மாண வர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது கோரிக்கைகளை எங்களிடம் அளித் துள்ளனர். ‘நமக்கு நாமே’ பயணத் தின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இதுவரை 2 லட்சத்து 75 ஆயிரம் மனுக்களைப் பெற்றுள்ளார். திமுக சார்பில் பெறப் பட்டுள்ள மனுக்களில் உள்ள அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்’’ என்றார்.
கடந்த 2006 தேர்தல் அறிக்கை யில் இலவச கலர் டிவி ரூ.2-க்கு ஒரு கிலோ அரிசி, இலவச சமையல் எரிவாயு அடுப்பு உள்ளிட்ட வாக் குறுதிகளை திமுக முன் வைத்தது. தேர்தல் அறிக்கையை கதாநாயகன் என வர்ணித்து திமுக தலைவர் கள் மட்டுமல்லாது ப.சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அப்போது பிரச்சாரம் செய்தனர். 2011 தேர்தலில் இலவச மிக்ஸி, கிரைண்டர், கல்லூரி மாணவர் களுக்கு இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை திமுக அறிவித்தது.
அதுபோல 2016 தேர்தல் அறிக் கையில் பெண்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் மாணவர்கள், இளைஞர்களைக் கவரும் வகையில் பல்வேறு இலவச திட்டங்களை அறிவிக்க திமுக திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய செல்பேசிகள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதைப் பின்பற்றி சுய உதவிக்குழு பெண்கள் அனைவருக்கும் இலவச செல்பேசி வழங்குவோம் என வாக்குறுதி அளிக்க திமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தற்போது பெரும்பாலான வீடு களில் சுத்தகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்குகின்றனர். இதன் விலை ரூ.25 முதல் ரூ.50 வரை உள்ளது. எனவே, ரூ.10-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இலவச வை-பை இணைய இணைப்பு, கோவை, மதுரை, திருச்சிக்கு மெட்ரோ ரயில், மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம், முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு வேலை, ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சதவீதம் அதிகரிப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, வீட்டுவசதி வாரியம் மூலம் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளிக்க திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.