தமிழ்த் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியைத் திணிப்பதா?- மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்த் தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியைத் திணிப்பதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச. 02) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையின் பிரிவான பிரசார் பாரதி அண்மையில் சமஸ்கிருத மொழி தொடர்பாக ஒருதலைப்பட்சமாக ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. தமிழ் மொழியில் ஒளிபரப்பப்படும் பொதிகை தொலைக்காட்சி உட்பட அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும் இனி கண்டிப்பாக சமஸ்கிருத மொழியில் செய்திகள் ஒளிபரப்பப்பட வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் மொழி உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்பதோடு, மாநில மக்களின் உணர்வுகளையும் புறக்கணிப்பதாக உள்ளது.

மத்திய பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சமஸ்கிருத ஆண்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருத மொழிக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மொழி என்ற ஆர்எஸ்எஸ் கோட்பாட்டினை நிறைவேற்ற முனைப்பான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது பாஜக அரசு. அதன் ஒரு பகுதியாக தற்போது சமஸ்கிருத மொழியில் செய்திகள் வாசிக்கப்படுவது என்ற மத்திய அரசின் முடிவினைக் கண்டிப்பதுடன், சமஸ்கிருத மொழியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் எனும் பிரசார் பாரதி அமைப்பின் உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நிறுத்த வேண்டுமெனவும், மக்கள் உணர்வுக்கு எதிராக, ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிக்கும் நடவடிக்கையை முற்றாகக் கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in