

புரெவி புயல் பாம்பன் - குமரி இடையே கடக்கும் என்று வானிலை மையங்கள் அறிவித்துள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடற்பரப்பில் இந்திய கடலோர காவல்படை மற்றும் ஐஎன்எஸ் பருந்தையைச் சார்ந்த வீரர்களும் மீட்புப் பணிகளுக்குத் தயார் நிலையில் இருக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம் கடற்பகுதிகளில் புரெவி புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்ச ர்ஆர்.பி.உதயகுமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமேசுவரத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக சமீபத்தில் தமிழகத்தில் கரையைக் கடந்த நிவர் புயலால் பெரியளவில் பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படாமல் பாதுகாப்பாக எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது 'புரெவி' புயலாக வலுப்பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்புயல் இலங்கையில் கரையைக் கடக்க தொடங்கி, தென் தமிழகத்தில் பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 180 கடற்கரை கிராமங்கள் உள்ளன. அதேபோல, எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய 39 தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாமென முன்னறிவிப்பு வழங்கப்பட்டு மீனவர்களின் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து துறை அலுவலர்கள் பங்களிப்பு செய்திடும் வகையில் 15 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக 2 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், 3 தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், பேரிடர் சிறப்பு பயிற்சி பெற்ற தீயணைப்பு மீட்புக் குழுக்கள் என 350-க்கும் மேற்பட்ட மீட்புக் குழு அலுவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரக அளவில் முதல்நிலை மீட்பு பணிகளுக்காக 3,500 நபர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்திய கடலோர காவல்படை, ஐஎன்எஸ் பருந்து சார்ந்த வீரர்களும் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புயல் கன மழை நேரத்தில் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். வானிலை முன்னறிவிப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்றி, அரசு மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.