Published : 02 Dec 2020 05:06 PM
Last Updated : 02 Dec 2020 05:06 PM

குமரி இடைத்தேர்தல் பணிகளில் நாம் தமிழர் கட்சி தீவிரம்: காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது? 

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் பிப்ரவரிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் பாஜக, காங்கிரஸ் கூடாரம் இதுவரை தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டாத நிலையில், நாம் தமிழர் கட்சி, பிரச்சார ஓட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் குமரி தொகுதிக்கான வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் எனப் பெரும்படையே சீட் கேட்டுக் காத்து நிற்கிறது. இதேபோல் காங்கிரஸிலும் விஜயதரணி, வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் எனப் பலரும் சீட் கேட்கின்றனர். ஆனாலும் வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகத் தெரியாததால் பாஜக, காங்கிரஸ் முகாம்களில் இதுவரை தேர்தல் சூடுபிடிக்கவில்லை.

அதேநேரம் கடந்த தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் 17,015 வாக்குகள் மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சியானது, குமரி இடைத்தேர்தலுக்குப் பிரதான கட்சிகளை முந்திக்கொண்டு வேட்பாளராக வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வினை அறிவித்துள்ளது. அவர் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில் தொகுதிக்குள் சுவர் விளம்பரங்களும் பளிச்சிடுகின்றன.

நாம் தமிழர் கட்சியின் பிரச்சார வியூகம் குறித்து கட்சியின் மாநிலப் பேச்சாளர் ஹிம்லர் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளின் எம்.பி. காலத்தையும் குமரி மக்கள் பார்த்திருக்கிறார்கள். இங்கே அனைத்து மக்களுக்கான குரலாக யாரும் ஒலிக்கவில்லை.

அனைத்துத் தமிழர்களின் துயர் துடைக்கும் இடத்தில் நாம் தமிழர் இருக்கும் எனப் பிரச்சாரம் செய்கிறோம். கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எங்களுக்கு முன்பே பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மீனவ சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் நோக்கத்தில் மீனவ சமூகத்தில் இருந்து வேட்பாளரை நிறுத்தினார் சீமான்.

ஆனால், காங்கிரஸ் வாக்குகளைப் பிரிப்பதற்காக மீனவ சமூகத்தினரைத் தேர்ந்தெடுத்ததாக காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்துவிட்டார்கள். இப்போது நாங்கள் முதலில் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் இனி பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீச முடியாது. இப்போதே திண்ணைப் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வாக்குறுதிகளாக இல்லாமல் எங்களால் செய்ய முடிந்ததை இப்போதே செய்கிறோம். ராமன்புதூர் பகுதியில் ஓட்டுக் கேட்டுப் போனபோது கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் சொன்னார்கள். மறுநாளே அங்கே போய்க் கொசு மருந்து அடித்தோம்.

தேர்தல் நெருங்க நெருங்க பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி போலவே சூழல் களம் உருவாக்கப்படும். அதனால் முன்கூட்டியே வேட்பாளர் அறிவித்துக் களத்துக்கு வரும்போது மக்களின் கவனத்தை எங்களை நோக்கித் திருப்ப முடியும் அல்லவா? அதனால்தான் நாம் தமிழர் வேட்பாளரை அறிவித்துவிட்டுக் களத்தில் நிற்கிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x