

புரெவி புயலின் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகயாக தனுஷ்கோடியிலிருந்து மீனவ மக்கள் வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த நவம்பர் 25 அன்று புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனை தொடர்ந்து சனிக்கிழமை வங்கக்கடலில் உருவான புதியக் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் வைக்கப்பட்டது.
பாம்பனுக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ள புரெவி புயல் புதன்கிழமை இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது.
திரிகோணமலை அருகே கரையைக் கடந்த பின் புரெவி புயல் அதே வேகத்துடன் மேற்கே நகர்ந்து மன்னார் வளைகுடா அருகே வியாழக்கிழமை காலை அடைகிறது. தொடர்ந்து பாம்பன்-குமரி இடையே தென் தமிழக கடற்கரையில் புரெவி புயல் கரையைக் கடக்கும். மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் பாம்பன் - குமரி இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் புயல் கரை கடக்கும்பொழுது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் மிக அதிகமாகவும், கனமழை, மிக கனமழை போன்ற சூழ்நிலை நிலவும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவித்துள்ளது.
புரெவி புயல் அறிவிப்பினைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 197 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகளுக்காக 324 ஜே.சி.பி இயந்திரங்கள், 24 உயர் மின்அழுத்த தண்ணீர் உருஞ்சு பம்புகள், 16800 மணல் மூட்டைகள், 3563 மின்கம்பங்கள், 1020 சவுக்கு மரக்கட்டைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து ராமேசுவரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பேருந்து மூலம் ராமேசுவரம் வந்தடைந்தனர்.
ஏழாம் எண் புயல் கூண்டு:
இந்நிலையில் புதன்கிழமை காலை பாம்பன் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. ஏழாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால் 'அபாயம்' என்று பொருள். அதாவது. புயல் கரையைக் கடப்பதையோ துறைமுகத்துக்கு அருகே கடப்பதையோ குறிக்கும்.
தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்:
புரெவி புயல் முன்எச்சரிக்கையாக தனுஷ்கோடியில் இருந்து மீனவர் மக்கள் (ஆண்கள் 210, பெண்கள்120, குழந்தைகள் 30) 360 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் வருவாய்துறையினர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேசுவரம் தீவில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தனுஷ்கோடி சாலையும் மூடப்பட்டது.
மேலும் புரெவி புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ராமேசுவரத்தில் ஆய்வு செய்தார்.
முன்னதாக முன்னெச்சரிக்கையாக ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் தங்களின் படகுகளை பாம்பன் தூக்குப் பாலம் வழியாக குந்துக்கால் மற்றும் குருசடை தீவுப் பகுதிகளில் நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.