

ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் தளி கொத்தனூர் உள்ளது. இங்கு ரூ.8.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்திய- இஸ்ரேல் அரசு கூட்டு ஒப்பந்த கொய்மலர் மகத்துவ மையத்தை இஸ்ரேல் நாட்டுத் தூதர் ஜோனாத்தன் ஜட்கா, துணைத் தூதர் ஏரியல் சீட்மேன் அடங்கிய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்த் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தளி கொத்தனூர் கிராமத்தில் இந்திய- இஸ்ரேல் கூட்டுத் தொழில்நுட்பத்தில் கொய்மலர் மகத்துவ மையத்தில் சாகுபடி செய்யப்பட்ட ரோஜா, கார்நேசன், ஜெர்பரா, கோல்டு ரெட், ரெட் ஜிஞ்ஜர் லில்லி, டார்ச் லில்லி உள்ளிட்ட பல்வேறு வகையான அழகிய வண்ணமலர்கள் இடம்பெற்ற கண்காட்சியை இஸ்ரேல் நாட்டுத் தூதர் ஜோனாத்தன் ஜட்கா தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து பசுமைக்குடிலில் கார்னேசன் மலர் செடிகள் நடவுப் பணிகளைத் தொடங்கி வைத்தும், தளி கொத்தனூர் கிராமத்தில் விவசாயி ஜெகதீஷ், இந்திய- இஸ்ரேல் கூட்டுத் தொழில்நுட்ப முறையில் பயிரிடப்பட்டிருந்த ரோஜா தோட்டத்தையும், கொய்மலர் மகத்துவ மையத்தில் நிழல்வலைக் கூடாரத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பலவிதமான இலை அலங்காரச்செடிகளையும் பார்வையிட்டனர்.
பின்பு இஸ்ரேல் நாட்டுத் தூதர் ஜோனாத்தன் ஜட்கா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்திய- இஸ்ரேல் நாட்டு அரசுகளின் கூட்டு ஒப்பந்தத் திட்டத்தில் தளி கொய்மலர் மகத்துவ மையம் 2017-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் ரூ8.8 கோடி மதிப்பில் 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்திட்டம் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் கொய்மலர் சாகுபடியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதுகாக்கப்பட்ட முறையில் கொய்மலர்கள் சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கும்பொருட்டு செயல்விளக்க மையம் அமைக்கப்பட்டு, அனைத்து உயர் தொழில்நுட்பங்களும் விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைக் கள அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இதுவரை விவசாயிகள், வங்கி உயர் அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என இதுவரை மொத்தம் 7,455 பேர் உயர் தொழில்நுட்ப முறையில் பயிற்சி பெற்றுப் பயனடைந்துள்ளனர்'' என்றார்.
இந்த நிகழ்வில் தோட்டக்கலை இணை இயக்குநர் ஜி.கே.உமாராணி, திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆறுமுகம், வினயாஜெனிபர், சிவசங்கரி மற்றும் தோட்டக்கலைத் துறைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.