Last Updated : 02 Dec, 2020 03:59 PM

 

Published : 02 Dec 2020 03:59 PM
Last Updated : 02 Dec 2020 03:59 PM

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு; திருச்சியில் வலுக்கும் போராட்டங்கள்: ரயில் மறியல், வங்கி முற்றுகையில் ஈடுபட்ட 191 பேர் கைது

உறையூர் குழுமணி சாலையில் ஏர் கலப்பையுடன் ஊர்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினர்.

திருச்சி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் 3-வது நாளான இன்று ரயில் மறியல், வங்கி முற்றுகை, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் ஈடுபட்ட 191 பேரை போலீஸார் கைது செய்தனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கக் கூட்டமைப்பினர் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இதன் சார்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 2 நாட்களாக திருச்சியில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், 3-வது நாளான இன்று (டிச. 02) ஜீயபுரம், பாலக்கரை ஆகிய இடங்களில் ரயில் மறியலிலும், எடமலைப்பட்டிப்புதூரில் வங்கி முற்றுகையிலும் ஈடுபட்டனர்.

இதேபோல், உறையூர் குறத்தெரு பகுதியில் திமுக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பிலும், குழுமணி சாலையில் காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ரயில் மறியல்

ஜீயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத்மணி தலைமையில் ரயில் மறியலுக்குச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு நேரிட்டது. இதையடுத்து, ரயில் நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வினோத்மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சி.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.மோகன் உட்பட 32 பேரை போலீஸார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

ஜீயபுரத்தில் ரயிலை மறிக்க ஊர்வலமாகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

இதேபோல், பாலக்கரை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிச் செயலாளர்கள் ஆர்.சிவக்குமார், எம்.ஐ.ரபீக் அகமது ஆகியோர் தலைமையில், வேர்ஹவுஸ் மேம்பாலப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வெற்றிச்செல்வன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உட்பட 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பாலக்கரையில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர். படம்: ஜி.ஞானவேல்முருகன்

வங்கிக் கிளை முற்றுகை

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அபிஷேகபுரம் பகுதிச் செயலாளர் ஏ.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சடலம்போல் ஒருவரை பாடையில் கிடத்தி ஊர்வலமாக வங்கி நோக்கி தூக்கிச் சென்றனர். போலீஸார் ஊர்வலத்தைத் தடுத்து பாடையைப் பறிக்க முயன்றதையடுத்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, இந்திரா நகர் கிளைச் செயலாளர் சேட்டு உட்பட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காங்கிரஸ் ஏர் கலப்பைப் பேரணி, ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வி.ஜவஹர் தலைமையில் உறையூர் குழுமணி சாலையில் உள்ள டாக்கர் பங்களா அருகில் இருந்து நாச்சியார் கோயில் சாலை சந்திப்பு வரை ஏர் கலப்பைப் பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து, அங்கு சாலை மறியலில் ஈடுபடச் சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஜவஹர், திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ் இளைஞரணி அகில இந்திய செயலாளர் லெனின், முன்னாள் மேயர் சுஜாதா, வழக்கறிஞர் சரவணன் மற்றும் 8 பெண்கள் உட்பட 54 பேரை போலீஸார் கைது செய்தனர்.

எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உறையூர் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, சிஐடியு, ஏஐடியுசி, மக்கள் அதிகாரம், மகஇக, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, தமிழ்த்தேச மக்கள் முன்னணி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிவசூரியன், இந்திரஜித், சுரேஷ், புலவர் முருகேசன், மு.அன்பழகன், வைரமணி, தமிழ்மாணிக்கம், கே.சி.பாண்டியன், முகம்மது அலி, செழியன், சம்சுதீன், ரங்கநாதன், மகஇக பாடகர் கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x