Published : 02 Dec 2020 01:51 PM
Last Updated : 02 Dec 2020 01:51 PM

புரெவி புயல் நிமிடத்துக்கு நிமிடம் கண்காணிப்பு; தென் தமிழகத்தில் தயார் நிலையில் நிவாரண முகாம்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் பேசிய அவர், மு.க.அழகிரியின் பேட்டியை சுட்டிக்காட்டி கிண்டலாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில், ""புரெவி புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடலில் புரேவி புயல் மையம் கொண்டுள்ளது, கடந்த 6 மணி நேரமாக 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது, கன்னியாகுமரிக்கு 700 கி.மீ தொலைவில் புரெவி புயல் கடலில் மையம், புயலால் தமிழகத்தில் சில இடங்களில் 75 முதல் 95 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும், புரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பனுக்கு இடையே கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது,

தென் தமிழகத்தில் கன மழை மற்றும் மிகுந்த கன மழை பெய்யும், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து உபரி நீர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது, முதல்வரின் வழிகாட்டுதல் படி புரெவி புயல் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது,

மதுரையில் 300 இடங்களில் மழை நீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, புரெவி இலங்கையில் கரையை கடப்பதாக தகவல் வந்துள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புரெவி புயலை எதிர்க்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன.

தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

புயல்கள் வருவதற்கு முன்னரே முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புயலால் உயிர் மற்றும் பொருட்கள் சேதம் இல்லாமல் புயலை எதிர்க்கொள்ள நடவடிக்கை, கஜா புயலில் 1 இலட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர், நிவர் புயலில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் நூறாண்டுகள் மேற்பட்ட தொன்மை வாய்ந்ததாகும். 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் அமைந்துள்ளது.

தென் தமிழக மக்களின் தலைவராக கருதப்படும் மதுரையில் செயல்படும் மாவட்ட ஆட்சி அலுவலக தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்க்காக வருகை புரிகின்றனர்

பேரவை 110 விதியின் கீழ் மாவட்ட ஆட்சியர் பெருதிட்ட வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக முதலமைச்சர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதலல்வர் துணை அமைச்சர் வருகை தந்தனர். தற்போது பணி முடிவடைந்துள்ளது

அதேபோல் புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவில் மதுரை மாநகரக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து குழாய் மூலம் மதுரை மாநகருக்கு தினமும் 120 எம்.எல்.டிகுடிநீர் பெறப்பட்டு நாள் முழுவதும் மதுரை மாநகரில் உள்ள 100 வார்களுக்கும் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம்செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கும் வண்ணம்1,295 கோடி மதிப்பில் திட்டப் பணிக்கான அடிக்கல் முதலமைச்சர் நாட்டுகிறார். புதிய திட்டத்தால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும்,

இதைத் தொடர்ந்து 69கோடி மதிப்பில் பல்வேறு முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் இந்த நிகழ்ச்சி வருகின்ற 4ம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 3-ம் தேதி இரவு காரின் மூலம் முதலமைச்சர் மதுரைக்கு வருகை தருகிறார்

வாரணாசி, மைசூர் போன்று விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது. இதில் அண்டர் பாஸ் முறையில் மேல்தளத்தில் விமான ஓடுதளம் கீழ்தளத்தில் போக்குவரத்தும் கொண்ட அண்டர்பாஸ் திட்டத்திற்கு முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்க உள்ளது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, துணைக்கோள் நகரம், நத்தம் சாலையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம் ,மதுரையில் சுற்றுச் சாலைகள், வைகை அணையில் இரண்டு தடுப்பணைகள் அதுமட்டுமல்லாது பல்வேறு உயர் மட்ட மேம்பாலங்கள் ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் திட்டப்பணிகள், இப்படி 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை மதுரைக்கு 4 ஆண்டுகளில் முதல்வர் வழங்கி உள்ளார்" என்றார்.

திமுக மீது விமர்சனம்:

திமுகவை விமர்சித்துப் பேசிய அமைச்சர், “ மதுரையில் உள்ள 35 லட்சம் மக்களும் முதல்வர் திட்டங்களால் பயன்பெற்றுள்ளனர் ஆனால் திமுக ஆட்சியில் இதுபோன்று பட்டியலிட்டுச் சொல்ல முடியாது. ஒன்றை மட்டும் சொல்லலாம் நில அபகரிப்பு ,கடும் மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து, அதிகார துஷ்பிரயோகம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

ஸ்டாலின் எந்தத் திட்டமும் செய்யாமல் அரசின் திட்டங்களை திசை திருப்பவருகின்ற பொய்ப் பிரச்சாரம் செய்கிறார் சட்டமன்றத் தேர்தலில் மதுரை உள்ள 10 தொகுதிகளில் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் வெற்றியை பரிசாக மக்கள் வழங்குவார்

புரெவி புயலின் வீரியத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது, புயலின் நிலையை கண்காணித்த பிறகு தான்
விடுமுறை குறித்த அறிவிப்பு கொடுக்க முடியும்,

திமுகவில் ஒரு புயம் உருவாகும், புயல் வலுப்பெருமா வழுப்பெறாத எனத் தெரியவில்லை, மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என மக்கள் பேசுகிறார்கள்.

திமுக ஆட்சி காலத்தில் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் இருந்தது, 2021 ல் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க மக்கள் முன் வந்துள்ளனர், புயல் வரும்போது முதல்வர் சூறாவளியாக சுழன்று நடவடிக்கைகள் எடுத்தார்

கரோனா காலகட்டத்தில் திமுகவினர் களத்திற்கு வரவில்லை, ஸ்டாலின் அறையில் உட்கார்ந்து கொண்டு காணொலி காட்சி மூலம் உரையாடினார் ஆனால் முதலமைச்சர் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு மாவட்டம் தோறும் சென்று ஆய்வு கூட்டம் நடத்தினார்

மதுரையில் இந்த நோயின் தாக்கம்18 சகவீதம் இருந்தது தற்போது 0.5 சவீதமாக குறைந்துள்ளது இதற்கெல்லாம் முதலமைச்சர் எடுத்த சீரிய நடவடிக்கை தான் காரணம் ஆகும்

அதுமட்டுமல்லாது முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழிகாட்டுதல்படி அம்மா கிச்சன் மூலம் தொற்று நோய்களுக்கு கடந்த 150 நாட்களாக உணவு வழங்கப்பட்டது 9 லட்சம் உணவு பொட்டனங்களும், 6லட்சம் தானிய பொட்டனங்களும் ஆக மொத்தம் 15 லட்சம் உணவு பொட்டனங்கள் வழங்கப்பட்டது

அதுமட்டுமல்லாது பொதுமக்களுக்கும் காய்கறி, அரிசி, முககவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன ஆனால் திமுக சார்பில் மக்களுக்கு எந்த உதவி வழங்கப்பட வில்லை அவர்களா கட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு அதை விளம்பரப்படுத்தி செய்தனர் இதை மக்கள் நன்கு அறிவார்கள்" எனப் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x