Published : 02 Dec 2020 01:57 PM
Last Updated : 02 Dec 2020 01:57 PM

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு; சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்கிற செயல்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மீண்டும் தொடர்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச. 02) வெளியிட்ட அறிக்கை:

"பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தைக் கைவிடுவதற்கு மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. 11, 12ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வசதியாக இந்தக் கல்வித் திட்டம் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தை முடக்குவதற்காக பாஜக அரசு 2017ஆம் ஆண்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மாணவர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 18 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கான நிதியை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் ஒதுக்கி வந்தன. ஏற்கெனவே, ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 லட்சம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை வழங்குவதால் பட்டியலின, பழங்குடி மாணவர்கள் பெருமளவில் பயனடையவில்லை. நாடு முழுவதும் 60 லட்சம் மாணவர்கள்தான் கல்வி உதவித்தொகை பெற்று வருகிறார்கள். தற்போது இந்தத் திட்டம் முற்றிலுமாகக் கைவிடப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தைக் கைவிட்டு விட்டு, பிரதமரின் பெயரில் பட்டியலின, பழங்குடியின மற்றும் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என அனைத்துத் தரப்பினருக்குமான புதிய கல்வி உதவித்தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே 65 லட்சம் பட்டியலின மாணவர்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், பிரதமரின் புதிய பெயரிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் மொத்த பயனாளி மாணவர்களே 62 லட்சமாகக் குறைத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இது ஒடுக்கப்பட்ட மாணவர்களையும், முன்னேறிய வகுப்பு மாணவர்களையும் ஒரே தட்டில் வைத்து, கல்வி உதவித்தொகை வழங்குவது சமூக நீதியைக் குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதன்மூலம் பாஜக அரசு தனது தலித் விரோதப் போக்கையே வெளிப்படுத்தியிருக்கிறது.

எனவே, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் 11, 12ஆம் வகுப்புகளில் படிப்பதற்கு மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிற கல்வி உதவித்தொகையை மத்திய பாஜக அரசு குறைப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இதில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை மீண்டும் தொடர்கிற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், மத்திய பாஜக அரசின் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டத்தை முடக்குகிற நடவடிக்கைக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x